நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி!!

தினகரன்  தினகரன்
நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி!!

டெல்லி : நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலியாகி உள்ளது தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய்க் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.இந்தியாவில் மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2.53 லட்சத்தைக் கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இதில் மருத்துவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இதன் பட்டியலை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் 175 மருத்துவர்கள் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் அதிக அளவாக இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 அறுவை சிகிச்சை மருத்துவர்களும் 4 குழந்தைகள் சிறப்பு மருத்துவர்களும் அடங்குவர். அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும் குஜராத்தில் 20 மருத்துவர்களும் டெல்லியில் 12 மருத்துவர்களும் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.அரியானா, மேகாலயா, ஒரிசா, புதுச்சேரி,காஷ்மீர் ஆகிய இடங்களில் தலா ஒரு மருத்துவர் உயிர் இழந்துள்ளனர்.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மருத்துவர்களுக்கு அதிகம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை