ஊரடங்கால் கிராமத்திற்கு சென்றோர் மீண்டும் நகரத்திற்கு திரும்புகின்றனர்

தினமலர்  தினமலர்
ஊரடங்கால் கிராமத்திற்கு சென்றோர் மீண்டும் நகரத்திற்கு திரும்புகின்றனர்

புதுடில்லி; ஊரடங்கு காரணமாக, சொந்த ஊர் திரும்பியோரில், மூன்றில் இரு பங்கினர், மீண்டும் வேலை தேடி நகரங்களுக்கு வரத் துவங்கியிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு பல முறை நீட்டிக்கப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பை இழந்த ஒரு கோடிக்கும் அதிகமானோர், நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறி, சொந்த ஊர் சென்றனர்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு வெகுவாக தளர்த்தப்பட்டதை அடுத்து, புலம் பெயர்ந்தோர், மீண்டும் நகரங்களுக்கு வரத் துவங்கியுள்ளனர். இது குறித்து, ஆகாகான் ஊரக ஆதரவு திட்டம், சேவா மந்திர் உள்ளிட்ட அமைப்புகள், ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆய்வறிக்கை விபரம்:சொந்த கிராமங்களுக்கு திரும்பியோரில், 29 சதவீதம் பேர், மீண்டும் நகரங்களுக்கு வந்து விட்டனர். 45 சதவீதம் பேர், வர முடிவெடுத்துள்ளனர். நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தான், கிராமங்களில் வேலை தேடுகின்றனர். நான்கு குடும்பங்களில், ஒரு குடும்பம், வறுமையால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

43 சதவீதம் பேர் இன்னும் அரை வயிறு தான் உண்கின்றனர். அதேசமயம், பொது வினியோக திட்டத்தில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதால், உணவு உட்கொள்வது சற்று அதிகரித்துள்ளது. மேலும், 6 சதவீத குடும்பங்கள், வீட்டுப் பொருட்களை அடமானம் வைத்து வாழ்க்கையை கழிக்கின்றன. 15 சதவீத குடும்பங்கள், கால்நடைகளை விற்று, பசியாறி வருகின்றன. 2 சதவீத குடும்பங்கள், நிலத்தை அடமானம் வைத்துள்ளன.

நிலத்தை 1 சதவீதம் பேர் விற்றுள்ளனர். 10 சதவீத குடும்பங்கள், உறவினர்களிடம் கடன் பெற்றுள்ளன. 7 சதவீதம் பேர், வெளியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஆய்வு செய்த குடும்பங்களில், 71 சதவீதத்தினரின் வீட்டில், எரிவாயு இணைப்பு உள்ளது. அதில், 85 சதவீதம் பேர், மத்திய அரசின், 'உஜ்வாலா' திட்டத்தில் இலவச எரிவாயு இணைப்பு பெற்றவர்கள். இவர்களுக்கு, ஜூன் மாதம் இலவச எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

90 சதவீத குடும்பங்கள், பிரதமரின் விவசாய மானியத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். அதில், 38 சதவீதம் பேரின் வங்கிக் கணக்கில், 2,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. வருவாய் இல்லாததால், 35 சதவீத குடும்பங்கள், வீட்டு விழாக்களை தள்ளி வைத்துள்ளனர். 13 சதவீதம் பேர், விழாவிற்கு குறைந்த எண்ணிக்கையில் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை