ஆம்புலன்சுக்கு பதிலாக குப்பை வண்டியில் செல்லும் கொரோனா நோயாளிகள்!: ஆந்திராவில் அவலம்..!!

தினகரன்  தினகரன்
ஆம்புலன்சுக்கு பதிலாக குப்பை வண்டியில் செல்லும் கொரோனா நோயாளிகள்!: ஆந்திராவில் அவலம்..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. நெல்லைமார்லா மண்டலம் ஜராகாபுபேட்டா நகரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் குப்பை ஏற்றி செல்லும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற ஆந்திர அரசு, தற்போது கொரோனா நோயாளிகளையும் ஏற்றி செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். மேலும் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அகற்றி சுத்தம் செய்யாமல் அடுத்த நோயாளிக்கு ஒதுக்கப்படுவதாக வேதனையுடன் கூறியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள கொரோனா நோயாளி ஒருவர் தெரிவித்ததாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒருமணி நேரமாக, மூச்சுவிட முடியாமல் துடித்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் வராததால் மூச்சுத்திணறி கண்ணெதிரே இறந்துவிட்டார். மூச்சுத்திணறி படுக்கையில் இருந்து விழுந்த ஒருவருக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை. நோயாளிகள் எக்கேடு கேட்டால் என்ன என்ற நிலை தான் மருத்துவமனையில் உள்ளது என குறிப்பிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் காலை நேரத்தில் மட்டும் மருந்து, மாத்திரைகளை வழங்கிவிட்டு சென்றுவிடுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால் சிகிச்சைக்கு வருபவர்கள் சடலமாக செல்லும் நிலை ஏற்படும் என்று நோயாளிகள் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை