கேரள தங்க கடத்தல் வழக்கு தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ திட்டம்: நள்ளிரவில் சொப்னா வீட்டில் சிவசங்கர் ‘ரிலாக்ஸ்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள தங்க கடத்தல் வழக்கு தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ திட்டம்: நள்ளிரவில் சொப்னா வீட்டில் சிவசங்கர் ‘ரிலாக்ஸ்’

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ மற்றும் சுங்க இலாகா துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் ரிலாக்ஸ் ஆக இருக்க சொப்னா வீட்டுக்கு சென்று வந்தேன் என என்ஐஏ விசாரணையின் போது ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் வாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா ஆகிய 2 அமைப்புகளும் சேர்ந்து மொத்தம் 33. 30 மணிநேரம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது.

ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த விசாரணையின் போது சொப்னாவுடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்து சிவசங்கர் என்ஐஏவிடம் கூறி உள்ளார். அதன் விவரம் வருமாறு: தலைமை செயலகத்தில் பணி முடிய பெரும்பாலும் நள்ளிரவு ஆகிவிடும்.

அப்போது நான் கடும் மன அழுத்தத்தில் இருப்பேன். இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே சொப்னாவை பார்க்க அடிக்கடி சென்று வந்தேன்.

இதற்காகத் தான் தலைமை செயலகத்துக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சொப்னாவுக்கு கொடுத்தேன். சொப்னாவின் வீட்டுக்கு சென்று வருவதன் மூலம் மன அழுத்தம் பெருமளவு குறைந்தது.

எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. சொப்னா வீட்டில் நடக்கும் மது விருந்திலும் கலந்துகொள்வேன்.

இதுவும் எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

இந்த விருந்தில் வைத்து தான் சரித், சந்தீப்நாயருடன் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு முதலில் சொப்னாவை மட்டும் தான் தெரியும்.

அவரது கணவர் எனக்கு உறவினர் ஆவார். கேரள அரசில் எனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி என்னை அந்த கும்பல் சதியில் சிக்கி வைத்து விட்டது.

சொப்னாவுடன் வந்த கும்பல் தேச விரோத செயல்களில் ஈடுபட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதை புரிந்துகொள்வதில் நான் தவறு செய்துவிட்டேன்.

நான் தேச விரோத செயல்கள் எதற்கும் துணை போகவில்லை. என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடக்கிறது.

சொப்னாவுடன் ஏற்பட்ட பழக்கம் காணரமாக எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்னைகள் ஏற்பட்டது உண்மை தான்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில், தங்க கடத்தலில் தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், தமிழகத்திலும் விசாரிக்க என்ஐஏ மற்றும் சுங்க இலாகா திட்டமிட்டுள்ளது. பாலபாஸ்கர் வழக்கு சிபிஐ வசம் கேரளாவில் பிரபல வயலின் இசை கலைஞராக இருந்தவர் பாலபாஸ்கர்.

இவர் சில மலையாள படங்களில் இசை அமைத்துள்ளார். ஏ. ஆர். ரகுமான் குழுவிலும் இசை அமைத்துள்ளார்.

இவர் கடந்த 2018 செப். 25ம் தேதி மனைவி லட்சுமி, 2 வயது மகள் தேஜஸ்வி, குடும்ப நண்பர் அர்ஜூன் ஆகியோருடன் திருச்சூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது திருவனந்தபுரம் பள்ளிபுரம் பகுதியில் கார் ஒரு மரத்தில் மோதியது. இதில், தேஜஸ்வி, பாலபாஸ்கர் ஆகியோர் இறந்தனர்.

இந்த சம்பவம் விபத்து அல்ல என்றும் பாலபாஸ்கரை கொலை செய்துவிட்டனர் என்றும் அவரது தந்தை உண்ணி கூறினார். மேலும் இந்த வழக்கில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்தார்.

இதை கேரள அரசும் ஏற்றுக் கொண்டு சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே சமீபத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரித்குமாரை, பாலபாஸ்கர் இறந்தபோது விபத்து நடந்த இடத்தில் பார்த்ததாக ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக சிபிஐ அறிவித்துள்ளது.

இதனால், பாலபாஸ்கர் மரணத்துக்கும், தங்கம் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உண்டா என்பது விரைவில் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

.

மூலக்கதை