ரயில்களில் 'சிசிடிவி' கேமரா, குளிரூட்டப்பட்ட குடிநீர்

தினமலர்  தினமலர்
ரயில்களில் சிசிடிவி கேமரா, குளிரூட்டப்பட்ட குடிநீர்

புதுடில்லி: ரயில்களில் பயணியரின் வசதிக்காக, 'சிசிடிவி' கேமராக்கள், குளிர்ந்த குடிநீர் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நாட்டில், ரயில் பயணங்களை பாதுகாப்பாகவும், பயணியரின் வசதிகளை மேம்படுத்தவும், தேவையான திட்டங்களை உருவாக்க, இந்திய ரயில்வே முடிவு செய்தது. இதுதொடர்பாக, ரயில்வே ஊழியர்கள் தங்கள் யோசனைகளை பதிவேற்றம் செய்வதற்காக, ஒரு தனிப்பட்ட இணையதளத்தை, செப்., 2018ல் உருவாக்கியது.

இதில், 2019ம் ஆண்டு, டிச., வரை, 2,645 ஆலோசனைகள் பகிரப்பட்டன. அவற்றில், 20 கருத்துகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது.அவற்றை செயல்படுத்த, அனைத்து மண்டல பொது மேலாளர்கள் மற்றும் உற்பத்தி பிரிவுகளுக்கு, 10ம் தேதி உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை, ரயில்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள். அவை தவிர, மின்சாரம் இல்லாமல் தண்ணீரை குளிர்விக்கும் கட்டமைப்பை, மேற்கு ரயில்வே உருவாக்கி உள்ளது. இதற்கு, 1.25 லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், 10 ஆண்டுகள் செயல்படும். இவை, மும்பையின் பாந்த்ரா உள்ளிட்ட, சில ரயில் நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளன.

அலகாபாத் ரயில் நிலையத்தில், ரயில் புறப்படுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக, நடைமேடையில் உள்ளவர்களை எச்சரிக்கும் ஒலி எழுப்பப்படுகிறது.ரயில் பெட்டிகளில் நடப்பவற்றை, நேரடியாக கண்காணிக்கும், 'சிசிடிவி' கேமரா அமைப்பும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கான கட்டமைப்பு ரயிலின், 'கார்டு' பெட்டியில் இருக்கும்.

ரயில் நிலையங்களில், காற்றின் தரத்தை ஆய்வு செய்யும் கருவிகள் நிறுவப்பட உள்ளன. இது, அலகாபாத் ரயில் நிலையத்தில், தற்போது செயல்பாட்டில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால், முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை பயணியரின், 'மொபைல்போன்'களுக்கு வழங்கும் நடவடிக்கையை, வடக்கு ரயில்வே உருவாக்கியது.இதுபோன்ற திட்டங்களை, அனைத்து ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த, ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

மூலக்கதை