டாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
டாக்டர்களின் ஓய்வூதிய உயர்வு ரத்து; அரசு முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை : 'ஓய்வு பெற்ற டாக்டர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கொரோனா காலத்தில் டாக்டர்கள் முன்னணி கள வீரர்களில் முக்கியமாக இருக்கின்றனர். இதுபோல் தான் ஓய்வு பெற்ற டாக்டர்களும் தமிழக மக்களுக்காக தன்னலமற்று பணியாற்றியவர்கள். அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை இப்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது என்றால், டெண்டர்களுக்கு 1000 கோடி ரூபாய், 10 ஆயிரம் கோடி ரூபாய் என அனுமதிப்பதற்கு எங்கிருந்து நிதி வருகிறது அரசுக்கு.

குறிப்பாக மக்களுக்கு தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்த டாக்டர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை எனக் கூறுவது மாபாதகச் செயல். ஓய்வுபெற்ற டாக்டர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

நலம் விசாரிப்பு


'டுவிட்டர்' பக்கத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

* கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கூட்டுறவு துறை அமைச்சர் ராஜுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும். எப்போது யாரால் எப்படி என தெரியாத அளவுக்கு நோய் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

* அறிவியல் மற்றும் கலைப் படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்க பரிந்துரைப்பது எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். உலக அளவில் போட்டியிடுவதற்கான நம் திறனையும் குறைத்து விடும். இம்முடிவை கைவிட்டு அனைவரும் கல்வி பெறும் வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை