'பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கியது தமிழக அரசு

தினமலர்  தினமலர்
பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கியது தமிழக அரசு

சென்னை : 'பல்முனை அழுத்தத்தால், சட்டப் பொறியில் சிக்கி கொண்ட தமிழக அரசு, ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்குக் காட்டி தப்பிவிட நினைக்கக் கூடாது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சாத்தான்குளத்தில், ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரை கொடூரமாக கொலை செய்தவர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தலையீட்டால், உரிய சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு, வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன்.இத்தோடு கடமை முடிந்ததாக, தமிழக அரசு தப்பு கணக்கு போடக்கூடாது.இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகர்களும் கண்காணித்துக் கொண்டே இருப்பர். யாரையும் காப்பாற்ற, தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது.

இரண்டு பேர் கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்' பிரிவை சேர்ந்த சிலருக்கும், இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.தலைமை காவலர் ரேவதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்.கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை