ராஜ்ய சபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு

தினமலர்  தினமலர்
ராஜ்ய சபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு

வரும், 19ல் நடைபெற உள்ள ராஜ்ய சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, அடுத்த ஆண்டுக்குள், ராஜ்ய சபாவிலும் தனிபெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில், கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன், ஆட்சியைப் பிடித்தது. லோக் சபாவில் பெரும்பான்மை இருந்தாலும், ராஜ்ய சபாவில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மையில்லை. அதனால், சில மசோதாக்களை, மோடி அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது.ராஜ்ய சபாவில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 245. இங்கே, பா.ஜ.,வுக்கு, 75 உறுப்பினர்கள் உள்ளனர். தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்தால், மத்திய அரசுக்கு, 88 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

ஆதரவு

இது தவிர, பா.ஜ.,வின் தோழமை கட்சிகளான, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கை, 27 ஆக உள்ளது. இவர்களையும் சேர்த்தால், அரசுக்கு, 115 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. ஆனால், அ.தி.மு.க.,வின் ஒன்பது எம்.பி.,க்கள் மட்டுமே, அரசுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வருகின்றனர். மற்ற கட்சிகள், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, பா.ஜ.,வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை; பிரச்னைகள் அடிப்படையில் தான் ஆதரவு தருகின்றன. இதனால், பா.ஜ.,வுக்கு ராஜ்ய சபாவிலும் பெரும்பான்மை பலம் பெற வேண்டிய அவசியம் உள்ளது.ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, 39; தி.மு.க.,வுக்கு, ஐந்து; தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவுக்கு தலா, மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

தேர்தல் ஆணையம்

இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் காலியான, 55 ராஜ்ய சபா இடங்களுக்கு, மார்ச், 26ல் தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், 37 எம்.பி.,க்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப் பட்ட ஊரடங்கால், மீதிஉள்ள, 18 இடங்களுக்கு தேர்தல் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில், மீதிஉள்ள, 18 இடங்கள் மற்றும் புதிதாக காலியான ஆறு இடங்கள் உட்பட, மொத்தம், 24 இடங்களுக்கு, வரும், 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திரா, குஜராத், கர்நாடகாவில் தலா நான்கு, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா மூன்று, ஜார்க்கண்டில் இரண்டு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சலில் தலா ஒன்று என, 24 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. எதிர்பார்ப்புஇத்தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன், பா.ஜ., அதிக இடங்களில் எளிதாக வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் மூன்று இடங்களில் இரண்டிலும், ராஜஸ்தான், ஜார்க்கண்டில் தலா ஒரு இடத்திலும், கர்நாடகாவில் இரண்டு இடங்களிலும், அருணாச்சல், மிசோரமில் தலா ஒரு இடத்திலும், பா.ஜ., வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

மத்திய பிரதேசத்தில், சமீபத்தில், காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட சிலருக்கு, பா.ஜ., 'சீட்' வழங்கி உள்ளது. இவருக்கு போட்டியாக, காங்கிரஸ் தரப்பில், முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் மற்றும் புல் சிங் போட்டியிடுகின்றனர். அங்கு மூன்று இடங்களுக்கு, நான்கு பேர் களம் இறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தான், பா.ஜ., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ., கூடுதலாக ஒரு இடத்தை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், இந்த தேர்தலில், பா.ஜ., 13 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம், ராஜ்ய சபாவில் பா.ஜ.,வின் பலம். 88 ஆக உயர வாய்ப்பு உள்ளது. தே.ஜ., கூட்டணியின் பலம், 101 ஆக உயரவும் வாய்ப்பு உள்ளது.உத்தர பிரதேசத்தில், விரைவில், பல ராஜ்ய சபா இடங்கள் காலியாக உள்ளன.

நிறைவேற்ற முடியும்

அங்கு தேர்தல் நடக்கும் போது, பெரும்பான்மையான இடங்களை, பா.ஜ., கைப்பற்றும் என்பது உறுதி.அதனால், அடுத்த ஆண்டுக்குள், ராஜ்ய சபாவில் பெரும்பான்மை பலத்தை பா.ஜ., பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.ராஜ்ய சபாவில் பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டால், அனைத்து மசோதாக்களையும் மத்திய அரசால் எளிதாக நிறைவேற்ற முடியும்.

குஜராத்தில் பரபரப்பு

நடக்க உள்ள ராஜ்ய சபா தேர்தலில், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் தான் கடும் போட்டி நிலவுகிறது. அதிலும், குஜராத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.குஜராத்தில், நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில், மாநிலத்தை ஆளும், பா.ஜ., சார்பில் மூன்று பேரும், காங்கிரஸ் சார்பில் இரண்டு பேரும் போட்டியிடுகின்றனர். போட்டி ஏற்படாமல் இருந்திருந்தால், இரு கட்சிகளும், தலா இரண்டு இடங்களில் வென்றிருக்க முடியும். ஆனால், பா.ஜ., மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், ராஜ்ய சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே, காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., வலை வீச ஆரம்பித்துவிட்டது. மார்ச் மாதத்திலிருந்து இதுவரை, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் சட்டசபையின் பலம் 182. இதில், ஆளும், பா.ஜ.,வுக்கு, 103 எம்எல்.ஏ.,க்களும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, 65 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.எட்டு காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளதையும் சேர்த்து, 10 இடங்கள் காலியாக உள்ளன.

ராஜஸ்தானில், மூன்று இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில், காங்கிரஸ் இரண்டு இடங்களையும், பா.ஜ., ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியும், ஆனால், பா.ஜ., சார்பில் இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், 'கண்'



அடுத்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில், மேற்கு வங்கம், அசாம், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், மேற்கு வங்கத்தில், இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ., உள்ளது. கடந்த லோக் சபா தேர்தலில், 42 தொகுதிகளில், 18ல் பா.ஜ., வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அதற்கான காய்களை, பா.ஜ., இப்போதே நகர்த்த துவங்கியுள்ளது.

பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான ஜன சங்கத்தின் நிறுவனர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், கோல்கட்டா துறைமுகத்துக்கு, ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என, பெயர் மாற்றம் செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

மூலக்கதை