நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் திருப்பம் காட்டுப்பன்றிக்கு வைத்த தேங்காய் வெடியால் யானை சாவு: தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் திருப்பம் காட்டுப்பன்றிக்கு வைத்த தேங்காய் வெடியால் யானை சாவு: தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் காட்டுப்பன்றியை வேட்டையாட வைக்கப்பட்ட தேங்காய் வெடியை சாப்பிட்டபோது அது வெடித்து தான் கர்ப்பிணி யானை இறந்தது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கேரள மாநிலம்,  மலப்புரம்  மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு பகுதியில் வாயில் பலத்த காயத்துடன் யானை ஒன்று ஆற்றிற்குள் நின்று கொண்டிருந்தது. இதை கவனித்த வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் அதை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அது தண்ணீருக்குள் இறந்தது. பிரேத பரிசோதனையில் யானை கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அது, வெடிபொருளால் காயமடைந்து  குறைந்தது 2 வாரங்களாவது ஆகியிருக்கும். கீழ்த்தாடை, மேல்தாடை, நாக்கு  ஆகியவற்றில் பலத்த காயங்கள் காணப்பட்டன.   யானை  கொல்லப்பட்ட சம்பவம், தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதற்கு பாஜ மதச்சாயம் பூச முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.சம்பவம் குறித்து கேரள கவர்னர்  ஆரீப் முகமதுகான், விளக்கம் கேட்டதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இச்சம்பவம் பற்றி பாலக்காடு,  மலப்புரம் போலீசாரும்,  வனத்துறையும் இணைந்து விசாரணை நடந்தினர். இதில்  3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தீவிர விசாரணையில், மலப்புரம் எடவண்ணா பகுதியை சேர்ந்த வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாலக்காடு மாவட்டம் அம்பலப்பாறையில் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் வெடி பொருள் தயாரிப்பதில் கை தேர்ந்தவர். இவரை கைது செய்து நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இது குறித்த ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அம்பலப்பாறை வனப்குதியில் காட்டுப்பன்றிகள் அதிகம். இவற்றை சிலர் வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலும் தேங்காய் அல்லது பழங்களில் வெடி பொருள் நிரப்பி வனப்பகுதியில் வைப்பார்கள். இதை சாப்பிடும் பன்றிகள் வெடி வெடித்து இறந்துவிடும். பின்னர், அதை எடுத்து விற்பார்கள், மின்சார வேலி பயன்படுத்தியும் வேட்டை நடக்கிறது. இந்த பகுதியில் கரீம் என்பவரும் அவரது மகன் ரியாசுதீன் என்பவரும் பன்றிகளை வேட்டையாடி வந்துள்ளனர். இவர்கள் இதற்காக வில்சனிடம் வெடி பொருள் வாங்கி வந்துள்ளனர். சம்பவத்தன்றும் இதுபோல் தேங்காய்க்குள் வெடி பொருளை வைத்துள்ளனர். அதை கர்ப்பிணி யானை சாப்பிட முயன்றபோது வெடி வெடித்து இறந்துள்ளது என்று தெரிய வந்தது. இதையடுத்து கரீம், மற்றும் ரியாசுதீனும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை