கஜானா காலியாகி விட்டதா? புதிய திட்டங்கள் ஓராண்டுக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு

தினகரன்  தினகரன்
கஜானா காலியாகி விட்டதா? புதிய திட்டங்கள் ஓராண்டுக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக பெருமளவு நிதி செலவிடப்பட வேண்டியிருப்பதால், இன்னும் ஓராண்டுக்கு எந்த புதிய திட்டங்களும் தொடங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, அரசின் கஜானா காலியாகி விட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 2 மாதத்திற்கு மேலாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயிலும் பெரிய துண்டு விழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் பொருளாதாரத்தை மீட்க, ரூ.20 லட்சம் கோடிக்கான கொரோனா நிவாரண நிதிச் சலுகையை மத்திய அரசு அறிவித்தது. அதே சமயம், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், அடுத்த ஓராண்டுக்கு நாட்டில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தப் போவதில்லை என மத்திய நிதி அமைச்சகம் நேற்று திடீரென அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று நோய் பரவலால் பொது நிதி ஆதாரங்களில் அசாதாரண தேவைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், தற்போதைய மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நிதி ஆதாரத்தை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பிரதமர் கரீப் கல்யாண் நிதி தொகுப்பு மற்றும் தற்சார்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே இனி நிதி செலவிடப்படும். அதைத் தவிர்த்த மற்ற எந்த புதிய திட்டங்களும் அடுத்த ஓராண்டுக்கு செயல்படுத்தப்படாது. எனவே, அமைச்சகங்கள் புதிய திட்டத்திற்கான நிதி கோரிக்கை விடுப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம், நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்னையால் அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதால், கஜானா கையிருப்பில் பெரும் நெருக்கடி நிலவுவதாக தெரிகிறது. இதன் காரணமாகத்தான் புதிய திட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளது.பொருளாதார ஆய்வால் எடுக்கப்பட்ட முடிவா?‘கொரோனா மற்றும் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடையும், கடந்த 11 ஆண்டில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி குறையும்,’ என பொருளாதார ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. சர்வதேச கடன்தர நிர்ணய ஆய்வு நிறுவனமான மூடிஸ், முதலீடு செய்ய ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவுக்கு கடைசிக்கு முந்தைய இடத்தை தந்து தரவரிசையை குறைத்தது. கொரோனா பாதிப்பை பொறுத்தே எதிர்கால பொருளாதார கொள்கைகள் அமையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறியிருந்தார். இவற்றின் எதிரொலியாகவே தற்போது புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு கைவிரித்துள்ளது.

மூலக்கதை