நாடு முழுவதும் ஜூன் 8ல் வழிபாட்டு தலங்கள் திறப்பு? இசை கச்சேரி, பிரசாதம், சொற்பொழிவுக்கு தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் ஜூன் 8ல் வழிபாட்டு தலங்கள் திறப்பு? இசை கச்சேரி, பிரசாதம், சொற்பொழிவுக்கு தடை

* மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
* ஸ்கேனர் டெஸ்ட், மாஸ்க் அணிதல், சானிடைசர் கட்டாயம்

புதுடெல்லி: நாடு முழுவதும் வருகிற 8ம் தேதி வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், இசைக் கச்சேரி, பிரசாதம் வழங்கல், சொற்பொழிவு போன்றவற்றிக்கு தடை தொடர்கிறது. பக்தர்களுக்கு ஸ்கேனர் டெஸ்ட், மாஸ்க் அணிதல், சானிடைசர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற 8ம் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் உள்ள வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

மற்ற மண்டல பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்கலாம். வழிபாட்டு தலங்களில் தேவையான சமூக இடைவெளி மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும்.

தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்க, வழிபாட்டு தலங்களில் பதிவுசெய்யப்பட்ட பக்தி இசை அல்லது பாடல்கள் இசைக்கலாம். அதேநேரம் பாடகர் அல்லது இசைக் குழுவினர் அல்லது இசை கச்சேரிக்கு அனுமதி கிடையாது.

வழிபாட்டு தலங்களில் நடக்கும் பொதுவான பிரார்த்தனைகளில் பக்தர்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்வதற்கு வசதியாக பாய்களை பயன்படுத்தக் கூடாது. மாறாக பக்தர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் தனியாக பாய் அல்லது துணியைக் கொண்டு வர வேண்டும்.

வழிபாட்டு தலங்களில் பிரசாதம், தீர்த்தம் வழங்க அனுமதி இல்லை. வழிபாட்டு இடங்களில் உள்ள சமையலறைகள், இதர கூடங்களில் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.



65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கை சுகாதாரத்தை உறுதிசெய்யும் வகையில், வழிபாட்டு தலங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும்.

பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கொரோனா அறிகுறியற்ற நபர்களை மட்டுமே வழிபாட்டு தலங்களில் அனுமதிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு தகவல்களை ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள் மூலம் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.

அதேபோல், தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சுவரொட்டிகள் முக்கியமாக வைக்க வேண்டும். வழிபாட்டு தலங்களின் வளாகத்தில் உள்ள கடைகள், ஸ்டால்கள், சிற்றுண்டிச்சாலை போன்ற இடங்களில் உள்ளேயும், வெளியேயும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.



தரிசனம் செய்வதற்கு வசதியாக பக்தர்கள் வரிசையில் நிற்கும் போது, ​​வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பும் சோப்பு மற்றும் தண்ணீரில் கை, கால்களைக் கழுவ வேண்டும். அப்போது, ​​குறைந்தபட்சம் ஆறு அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். வளாகத்தில் உள்ள அனைத்து ஏர் கண்டிஷனிங் சாதனங்களின் வெப்பநிலை அளவை 24-30 டிகிரி செல்சியஸ் வரம்பில் வைத்திருக்க வேண்டும்.

ஈரப்பதம் 40- 70 சதவீத வரம்பில் இருக்க வேண்டும். வெளிக் காற்று உள்ளே சென்று வருவது போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சிலைகள் மற்றும் புனித நூல்களைத் தொடுவதை அனுமதிக்கக்கூடாது. வழிபாட்டு தலங்களில் பெரிய கூட்டங்கள், சொற்பொழிவு நடத்துவதற்கு தடை தொடரும்.

பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும். ஆரோக்ய சேது பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

வழிபாட்டு தலங்களில் உள்ள மற்ற கட்டிடங்களின் மேல் மாடிகள் மற்றும் பிற மேற்பரப்புகளை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்று இருப்பவர்கள் வந்தால், அவர்களை தனிமைப்படுத்த வசதியாக தற்காலிக ஒரு அறை அல்லது பகுதியை ஒதுக்க வேண்டும். அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

.

மூலக்கதை