டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2,200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

தினகரன்  தினகரன்
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2,200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

புதுடெல்லி: டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2,200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் மார்ச் மாதம் நடத்தப்பட்ட மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத போதகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. கொரோனா வைரஸைத் தடுக்க சமூக விலகல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டது. அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலகலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கேயே ஒன்றாகக் கூடியிருந்தனர். அக்கட்டிடத்தில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சோ்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதில் பங்கேற்றவர்களால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து, அந்த கட்டிடத்திற்கு டெல்லி காவல்துறை சீல் வைத்தது. மேலும், கொரோனா தொற்று தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, நுழைவு இசைவு மோசடி, மதப்பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாநாட்டில் பங்கேற்றவர்களில் சுமார் 915 வெளிநாட்டினருக்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரைகையையும் தாக்கல் செய்தது. இந்த நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த சுமார் 2,200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுற்றுலா விசாவில் வந்து விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்து, இந்தோனிஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லி மாநாட்டுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை