கொடுஞ்செயல்களால் உயிரிழக்கும் காட்டு யானைகள்: ஒரு யானை இறக்கும் போது கூடவே சேர்ந்து வனமும் அழியும் சூழல் ஏற்படும்: வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கொடுஞ்செயல்களால் உயிரிழக்கும் காட்டு யானைகள்: ஒரு யானை இறக்கும் போது கூடவே சேர்ந்து வனமும் அழியும் சூழல் ஏற்படும்: வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு வனப்பகுதியிலிருந்து மலப்புரத்துக்கு வந்த கர்ப்பிணி யானைக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட மரணம் மிகக் கொடூரமானது. நாடு முழுவதும் இந்த யானையின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மனிதத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்தாக இருந்தாலும், இதுபோன்ற செயல்களால் மற்ற விலங்குகள் தொடர்ந்து இந்தியாவில் உயிரிழந்துதான் வருகின்றன.இதில் அதிகம் பாதிக்கப்படுவது காட்டு யானைகள்தான். மிக முக்கியமாகக் காட்டு யானைகளுக்கு எமனாக இருப்பவை மின்வேலிகள். உதாரணத்துக்குத் தமிழகத்தில் மட்டும் தமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,113 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியிலிருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன தகவல் வெளியாகி உள்ளது. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கின்றன. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள பண்ணைத்தோட்டங்களில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.இது தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் மட்டும்தான், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோன்ற எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஒரு யானை இறக்கும் போது கூடவே சேர்ந்து வனமும் அழிகிறது என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பிட்ட வனப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள யானை அந்தப் பகுதி செழித்து வளர்வதற்கான சில இயற்கை உரங்களை இடுகிறது. கூடவே விதைப் பரவல் எனும் பணியைச் செய்கிறது. இதனால் ஒரு இயற்கை சுழற்சி காட்டிற்குள் நடைபெறுகிறது. ஆக, யானையின் இறப்பு என்பது வனத்தின் அழிவில் போய் முடியும் என வன விலங்கு ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.

மூலக்கதை