பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; ஊரடங்கில் 47% குடும்ப வன்முறை புகார்கள்: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; ஊரடங்கில் 47% குடும்ப வன்முறை புகார்கள்: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கில் மட்டும் 1,428 (47%) குடும்ப வன்முறை புகார்கள் பெறப்பட்டதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.

தற்போது தளர்த்தப்பட்ட நிலையில் நீடிக்கிறது. கிட்டத்தட்ட 71 நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால், வீடுகளில் முடங்கியுள்ள பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்றோருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு (என்சிடபிள்யூ) சென்ற புகார்களின் விபரம் தற்போது வெளியாகி உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பெண்களுக்கு எதிரான 22 வகை குற்றங்களில் என். சி. டபிள்யூ பெற்ற 3,027 புகார்களில், 1,428 (47. 2%) குடும்ப வன்முறை தொடர்பானவை.


அதே ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 4,233 புகார்களில், சுமார் 20. 6% (871) குடும்ப வன்முறை தொடர்பானவையாக இருந்தன.

ஏப்ரல் மாதத்தில் என். சி. டபிள்யூக்கு அளித்த 999 புகார்களில் 51. 45% (514), மே மாதத்தில் 2,028 புகார்களில் 45. 07% (914) குடும்ப வன்முறை தொடர்பானவை.

ஊரடங்குக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, ​​ஜனவரி மாதத்தில், குடும்ப வன்முறை புகார்கள் 1,462 புகார்களில் 18. 54% (271) ஆக இருந்தன. பிப்ரவரியில் 1,424 புகார்களில் 21. 21% (302), மார்ச் மாதத்தில் 1,347 புகார்களில் 22. 21% (298) குடும்ப வன்முறை தொடர்பானவை.

ஊரடங்குக்கு பிந்தைய மேற்கண்ட புகார்களை விரைவாக விசாரிக்க மகளிர் ஆணையம் ஒரு சிறப்பு குழுவை அமைத்தது. ஊரடங்குக்கு முன், ேதசிய மகளிர் ஆணையம் ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் புகார்களைப் பெற்றது.

ஆனால், ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏப்ரல் 10ம் தேதி பிரத்யேக வாட்ஸ்அப் எண் தொடங்கப்பட்டது. மேலும், ஆன்லைனில் மற்றும் அஞ்சல் மூலம் புகார்களைப் பெற்றது.

ஏப்ரல் - மே மாதங்களில் வீட்டு வன்முறை தொடர்பான மொத்த புகார்களில், 727 புகார்கள் வாட்ஸ்அப் எண் - 72177135372-இல் பெறப்பட்டுள்ளன.

ஜனவரி முதல் பெறப்பட்ட 1,906 புகார்களில் 464 பதிவுகள் மே மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைபர் கிரைம் தொடர்பான புகார்களும் மார்ச் மாதத்தில் 37 ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 55 ஆகவும், மே மாதத்தில் 73 ஆகவும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், பாலியல் பலாத்காரம் மற்றும் முயற்சி தொடர்பான புகார்கள் குறைந்துவிட்டன. ஜனவரியில் 142 புகார்கள் வந்தபோது, ​​ஏப்ரல் மாதத்தில் வெறும் 12 புகார்கள் மற்றும் மே மாதத்தில் 51 புகார்கள் வந்தன என்று தேசிய மகளிர் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


.

மூலக்கதை