சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிப்பதால் மக்கள் அச்சம்; மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை: நோயை கட்டுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்க திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிப்பதால் மக்கள் அச்சம்; மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை: நோயை கட்டுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்க திட்டம்

சென்னை: கொரோனா தொற்று சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தவது குறித்து புதிய முயற்சிகள் எடுப்பது குறித்து முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 68 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தது.

ஆனாலும் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரசால் தினசரி 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் நேற்று மட்டும் புதிய உச்சமாக 964 பேர் கொரோனா ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியே விட்டால் தினசரி 1000த்தை தாண்டும் நிலை உள்ளது.



அதுமட்டும் அல்லாமல் உயிரிழப்பும் தினசரி 10ஐ தாண்டுகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாததால் வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சுகாதார துறை ஊழியர்கள் அலட்சியமாக பதில் சொல்வதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் படையெடுக்கிறார்கள்.

ஆனால், தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு தினசரி ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல பயப்படுகிறார்கள்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் படுக்கைகள் உள்ளதாக முதல்வர் ஒவ்வொருமுறையும் கூறி வருகிறார்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்க்க தயக்கம் காட்டுகிறார்கள். அப்படியே சேர்த்தாலும் 3 அல்லது 4 நாட்கள் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பும் நிலை உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டால் 14 நாட்கள் சிகிச்சை மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும், அரசின் அறிவிப்புகளை அலட்சியப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதியில் மக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறார்கள்.

போலீசாரும் மாஸ்க் அணியாமல் வந்தால் அபராதம் விதித்து வருகிறார்கள்.

ஆனாலும், கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை 11 மணிக்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அம்மா மாளிகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில், “சென்னையில் கடந்த 2 வாரமாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 500, 600, 800, 900 என அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? என்று விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் உயிரிழப்புகள் குறித்தும், அதை தடுக்க என்ன வழி என்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிதாக என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா பரிசோதனையை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடிசை பகுதிகள், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணங்கள் மற்றும் கொரோனாவுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைந்த கட்டணமே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதுபோன்ற தீவிர நடவடிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் சென்னையில் கொரோனா வைரசை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனாலும், வரும் நாட்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பொறுத்துதான் வரும் நாட்களில் கொரோனா வைரஸ் சென்னையில் குறையுமா? அதிகரிக்குமா? என்பது தெரியவரும்.

.

மூலக்கதை