அமைச்சருக்கு கொரோனா தொற்று; முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள் ‘தனிமை’: உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமைச்சருக்கு கொரோனா தொற்று; முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள் ‘தனிமை’: உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள் தங்களை சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்டதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில  சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ், கடந்த வாரம் கொரோனா வைரஸ் சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இவர் கடந்த வாரம், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார்.

தற்போது, கொரோனா தொற்று அறிகுறியுடன் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் மூன்று அமைச்சர்கள் தங்களை சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்டனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ், அவரது மனைவி மற்றும் 21 குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்ததால், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

மற்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் சத்பால் மகாராஜுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாததால் அவர்களுக்கு ஆபத்து இல்லை.

இருந்தும் இன்றைய நிலையில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் மூன்று அமைச்சர்கள் தங்களை சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்டனர்’ என்று கூறினர். முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் தங்களை சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்ட சம்பவம் உத்தரகாண்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இம்மாநிலத்தில் 959 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை