மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. எட்டுகட்டமாக மேற்குவங்கத்தில் தேர்தலை அறிவித்ததில் சதி நடந்துள்ளது என்று மம்தா குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்குவங்கம் மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு கட்டங்களாக 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சுமார் 78. 5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மொத்தம் 205 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது.



மேற்கு வங்கத்தில் வரும் 10, 17, 22, 26, 29ம் ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே 86 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டத்தில் 337 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் 320 பாதுகாப்புப் படைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அசாம், கேரளா, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. ஆனால் மேற்குவங்கத்தில் மட்டும் பலகட்டங்களாக வாக்குப்பதிவு நடத்துவது ஏன்? கொரோனாவை காரணம் காட்டி அவர்கள் (பாஜக) சதித்திட்டம் செய்துள்ளனர்.

அதனை நாங்கள் முறியடிப்போம். மேற்குவங்காளத்தில் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


.

மூலக்கதை