பெண் கொரோனா நோயாளி மரணம்: மருத்துவமனைக்கு உறவினர்கள் தீவைப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் கொரோனா நோயாளி மரணம்: மருத்துவமனைக்கு உறவினர்கள் தீவைப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

நாக்பூர்: மகாராஷ்டிராவில் பெண் கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்ததால் ஆவேசமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு தீ வைத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பெண்ணின் இறப்பு குறித்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உறவினர்கள் கும்பலாக சேர்ந்து அந்த மருத்துவமனையின் வரவேற்பாளர் அறையின் பகுதியை திடீரென தீ வைத்து கொளுத்தினர். இதனால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தகவலறிந்த அதிகாரிகள், இறந்த பெண்ணின் உறவினர்களை வெளியேற்றிவிட்டு தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து துணை ஆணையாளர் லோகித் கூறுகையில், ‘பெண்ணின் கணவரது உறவினர்களில் ஒருவர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். அவர் வரவேற்பாளர் மேஜை பகுதியில் திடீரென பெட்ேராலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடனடியாக, மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரில் 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் அந்த பெண் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ கட்டணம் ரூ. 1. 5 லட்சம் கேட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீ வைப்பு சம்பவத்தை நடத்தியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

.

மூலக்கதை