தி.மு.க.,வில் காங்.,குக்கு 22 இடங்கள் ?

தினமலர்  தினமலர்
தி.மு.க.,வில் காங்.,குக்கு 22 இடங்கள் ?

கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு, 22 தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., முன்வந்துள்ளது.
இந்த எண்ணிக்கையை ஏற்பது குறித்து, சென்னையில் இன்று நடக்கும் செயற்குழு
கூட்டத்தில், காங்கிரஸ் இறுதி முடிவு எடுக்க உள்ளது.

தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, நேற்று உடன்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே, முஸ்லிம் லீக் கட்சிக்கு, 3 தொகுதிகள்; மனிதநேய மக்கள் கட்சிக்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.ம.தி.மு.க.,வுக்கு, 7; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 7; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 6; காங்கிரசுக்கு, 22 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

ஆலோசனை



இதில், 22 தொகுதிகளை ஏற்பது குறித்து, காங்., நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்களுடன், சத்தியமூர்த்தி பவனில் நேற்று, தேர்தல் பொறுப்பாளர்கள் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, காங்கிரசார் கூறியுள்ளதாவது:
தற்போதைய எம்.எல்.ஏ.,க்களுக்கு, மீண்டும் வாய்ப்பு தருவது குறித்து, மேலிடம் முடிவு செய்ய வேண்டும். தமிழக கோஷ்டிகள் முடிவு செய்யக் கூடாது. கோஷ்டி தலைவர்கள், எம்.பி.,க்கள் ஆதரவாளர்களுக்கு, 'கோட்டா' முறையில், தொகுதிகள் ஒதுக்கக் கூடாது. தகுதி வாய்ந்த, கட்சிக்கு உழைத்த, வெற்றி வாய்ப்புள்ள கட்சியினருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும்.
தி.மு.க., தருகிற, 22 தொகுதிகளுக்கு பதிலாக, 27 கேட்க வேண்டும். ஒரு ராஜ்யசபா பதவியும் கேட்க வேண்டும். மூன்றாவது அணி அமைக்கிற எண்ணம் வேண்டாம். அது, தற்கொலைக்கு சமம். தி.மு.க., தருகிற, 22ம் வெறும், 'சீட்' அல்ல; எம்.எல்.ஏ., பதவிகள். எனவே, கூட்டணியில் நீடித்து, தொகுதி பங்கீட்டை அதிகரிக்க செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.

விவாதம்



ஒரு சில நிர்வாகிகள் மட்டும், மூன்றாவது அணி அமைக்க வலியுறுத்தி உள்ளனர். நேற்றைய கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்க முடியாததால், இன்று இரண்டாவது நாளாக, செயற்குழுக் கூட்டம், மாநில தலைவர் அழகிரி தலைமையில் நடக்கிறது.

அதில், வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, தினேஷ் குண்டுராவ் பங்கேற்கின்றனர். தி.மு.க., ஒதுக்கும், 22 தொகுதிகளை ஏற்பது குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின், மாலையில், மொய்லி தலைமை யிலான குழுவினர், அறிவாலயம் சென்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அப்போது, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

நடவடிக்கை



முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:
தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டில், எந்த பிரச்னையும் இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை. நான், காங்கிரஸ் தலைவர்களுடன் பேச உள்ளேன். அப்போது தான், இங்கு என்ன நடக்கிறது என்பது, எனக்கு தெரிய வரும்.இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை, தமிழக நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னர் தான் சொல்ல முடியும். கர்நாடக அமைச்சர் மீதான, ஆபாச வீடியோ புகாரில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, மொய்லி கூறினார். - நமது நிருபர் -

மூலக்கதை