காசோலை மோசடி வழக்கிற்கு தனி நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட்

தினமலர்  தினமலர்
காசோலை மோசடி வழக்கிற்கு தனி நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி :காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்க, கூடுதல் நீதிமன்றங்களை நியமிப்பது குறித்து, மத்திய அரசு பதில் அளிக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. அவற்றில், வங்கியில் பணமின்றி திரும்பும் காசோலை மோசடி தொடர்பாக மட்டும், 35 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளன.


அரசியல் சாசன சட்டம், 247 பிரிவு, சட்ட நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதற்கும், பயன்பாட்டில் உள்ள சட்டங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளவும், பார்லிமென்டிற்கு அதிகாரம் வழங்குகிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, காசோலை, கடன் உறுதி பத்திரம் போன்றவற்றுக்கான, நிதி பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழ், காசோலை மோசடிகளை விசாரிக்க, கூடுதல் நீதிமன்றங்களை மத்திய அரசு உருவாக்கலாம். இதற்கான சட்டங்களை இயற்றலாம்.

இந்த தனி நீதிமன்றங்களில், வழக்குகளை கையாள, காசோலை மோசடி பிரச்னைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.நீதித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளில், நிதிப் பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழ் மட்டும், 30 சதவீத வழக்குகள் உள்ளன. அதனால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைக்கவும், காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்க, கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்குவதற்கான சட்டமியற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

இது குறித்து, மத்திய அரசு அளிக்கும் பதிலை பொறுத்து, இவ்வழக்கில் உரிய முடிவெடுக்கப்படும். வழக்கு விசாரணை, வரும், 10ம் தேதி தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை