அ.தி.மு.க.,வில் 8,200 பேர் விருப்ப மனு

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க.,வில் 8,200 பேர் விருப்ப மனு

சென்னை : அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று விருப்ப மனு கொடுக்க, கடைசி நாள் என்பதால், கட்சியினர் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் நேற்று விருப்ப மனு அளித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, விருப்ப மனு வினியோகிக்கும் பணி, பிப்., 24ல் துவக்கப்பட்டது.நேற்று கடைசி நாள் என்பதால், விருப்ப மனு வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கவும், ஏற்கனவே வாங்கிய விருப்ப மனுவை வழங்கவும், ஏராளமானோர் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.இதனால், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுதும், கார்கள் நிரம்பி வழிந்தன. சாலையின் இரு புறங்களிலும், கட்சியினரின் கார்கள் நிறுத்தப்பட்டதால், காலை முதல் அப்பகுதியில், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பலர் மேள தாளத்துடன் வந்ததால், அப்பகுதி திருவிழா போல காட்சி அளித்தது. பெரும்பாலானோர், எம்.ஜி.ஆர்., - ஜெ., சிலை முன் வைத்து வணங்கி, வேட்பு மனுவை அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். மனு பெறும் இடத்தில், கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலர் சுனில், முன்னாள் அமைச்சர்கள் மூர்த்தி, சின்னையா உட்பட ஏராளமானோர், விருப்ப மனு அளித்தனர்.கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சின் இளைய மகன் ஜெய் பிரதீப், கம்பம், வில்லிவாக்கம் தொகுதிகளில் போட்டியிட, அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு அளித்தனர்.

நேற்று மாலை, 4:00 மணிக்கு, 8,200க்கும் மேற்பட்டோர், விருப்ப மனு அளித்தனர். அவர்கள் அனைவரும், இன்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக, நேர்காணல் நடக்க உள்ளது.

மூலக்கதை