கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ், கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படுவர் என ராகுல்காந்தி எம்பி தெரிவித்துள்ளார். கேரளாவில் விரைவில் வர உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா ‘ஐஸ்வர்ய யாத்திரை’ என்ற பிரசார பேரணியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காசர்கோட்டில் தொடங்கினார்.

இந்த பேரணி நேற்று திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. அதன் நிறைவு விழா சங்குமுகத்தில் நடந்தது.

இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி, கடந்த 21ம் தேதி மாலை கேரள மாநிலம் வயநாடு வந்தார். 22ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் மதியம் திருக்கைப்பட்டாவில் இருந்து மட்டில் வரை நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்றார்.



இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்ய யாத்திரை’ நிறைவு விழாவில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்ேபாது விவசாயிகள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள், மீனவர்கள், முதியவர்கள் உள்பட பொதுமக்களின் கவலைகள், துன்பங்கள், எதிர்கொண்ட துரோகத்தையும் கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மக்களுக்கான அறிக்கையை தயாரிக்கிறது. இதில் மக்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வழங்கும் ஒரு ‘நியாயமான’ திட்டம், மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கும் சுகாதார காப்பீட்டு திட்டம் மற்றும் அனைவருக்கும் காப்பீட்டு திட்டம் ஆகியவை அடங்கும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழக்கவும் முடியாது. இங்குள்ளவர்கள் அறிவுள்ளவர்களாகவும், பிரச்னைகளை பற்றி பேச ஆர்வமாகவும் உள்ளனர். டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் தினமும் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை ஏழைகளுக்காக மத்திய அரசு செலவழிக்கவில்லை.

சூப்பர் பணக்காரர்களுக்கு உதவ எரிபொருள் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில் மற்றும் பஸ் பயணத்திற்கு ₹300 செலுத்த தயங்கிய மத்திய அரசு, பெரிய நிறுவனங்களுக்கும், சூப்பர் செல்வந்தர்களுக்கும் ₹1. 5 லட்சம் கோடி வரிவிலக்கு அளித்துள்ளது.

கேரள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ், கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படுவர்’ என்றார். வட இந்திய தொகுதியில் 15 ஆண்டுகளாக எம்பியாக இருந்த ராகுல்காந்தி, தற்போது கேரளாவில் இருந்து மக்களவை உறுப்பினராக இருப்பது அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

இதற்கிடையே தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அரசு வேலை வழங்காமல், தற்காலிக பணியாளர்களாக உள்ள கம்யூனிஸ்ட் தொண்டர்களை கேரள அரசு பணி நிரந்தரம் செய்வதை கண்டித்து நடத்தப்படும் போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.

.

மூலக்கதை