எத்தனை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் மஜதவின் பலம் குறையவில்லை: மாஜி பிரதமர் தேவகவுடா நம்பிக்கை

தினகரன்  தினகரன்
எத்தனை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் மஜதவின் பலம் குறையவில்லை: மாஜி பிரதமர் தேவகவுடா நம்பிக்கை

பெங்களூரு: தேர்தல் ஜனநாயகத்தில் வெற்றி-தோல்வி என்பது இயல்பானது. மஜத எத்தனை தேர்தல்களில் தோற்று போய் இருந்தாலும் அதன் பலம் குறையாமல் உள்ளது என்று முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா கூறினார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ``மாநிலத்தில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வியல் உரிமைக்காக போராட்டம் நடத்தி வருகிறேன். ஆட்சி, அதிகாரம் இருந்தபோது, யாருடைய நலனுக்காக போராட்டம் நடத்தினேமோ, அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் திட்டம் செயல்படுத்தினோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைக்காக நான் நடத்தி வரும் போராட்டம் எனது உடலில் உயிர் இருக்கும் வரை தொடரும். நான் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்து வருகிறேன். பாராட்டுகளை காட்டிலும் விமர்சனங்கள் தான் நான் அதிகம் சந்தித்து வருகிறேன். இப்போது, மஜதவை பாஜவுடன் இணைக்கும் முயற்சி நடந்து வருவதாக சிலர் புது வதந்தியை பரப்பி வருகிறார்கள். அப்படி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதற்கான அவசியமுமில்லை. தேர்தல்களில் மஜத தோல்வியை சந்தித்து இருக்கலாம். ஆனால் அதன் பலத்தை இழக்கவில்லை. அதேபோல் சுயநலத்திற்காக மஜதவால் வளர்ந்த தலைவர்கள் கட்சி மாறி இருக்கலாம். ஆனால் அடிதளமான தொண்டர்கள் மாறாமல் உள்ளனர். நான் உயிருடன் இருக்கும் வரை, மஜதவை அழிக்க விடமாட்டேன். காங்கிரஸ் மற்றும் பாஜ ஆகிய இரு தேசிய கட்சிகள் எங்கள் கட்சியை அழிக்க துடிக்கிறார்கள்.எத்தனை சக்திகள் ஒன்று சேர்ந்தாலும் மஜதவை அழிக்க முடியாது. தீயில் எரித்தாலும் உயிருடன் எழும் பீனிக்ஸ் பறவை போல், மீண்டும் உயிர் தெழுவோம். நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவு புத்துணர்வை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதே உணர்வுடன் கட்சியை பலப்படுத்தி மீண்டும் மக்கள் சேவையை செய்வோம். அதற்காக எத்தனை விலை கொடுத்தாலும் உழைப்பேன். மீண்டும் மஜத ஆட்சியை அமைப்பேன்’’ என்றார்.தனித்து போட்டிமதசார்பற்ற ஜனதாதளத்திற்கு பழைய மைசூரு மாவட்டத்தில் தான் செல்வாக்கு இருப்பதாகவும் பிற மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்றும் கூறி வருகிறார்கள். இந்த விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் வரும் 2023ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம். அதற்காக இப்போதிலிருந்தே கட்சி வளர்ச்சி பணியை தொடங்கியுள்ளேன் என்று தேவகவுடா கூறினார்.

மூலக்கதை