புத்தர் போல் வேடமிடுகிறார் ஸ்டாலின்:

தினமலர்  தினமலர்
புத்தர் போல் வேடமிடுகிறார் ஸ்டாலின்:

சென்னை ''தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்தது; அதை, அ.தி.மு.க., மீட்டுக் கொடுத்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆட்சியில் இருந்த போது, சர்வாதிகாரியாக செயல்பட்டார். தற்போது, புத்தர் போல வேடமிடுகிறார்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை, துரைப்பாக்கத்தில், அ.தி.மு.க., சார்பில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: தமிழகத்தை, காங்., - தி.மு.க., ஆண்டுள்ளன. அ.தி.மு.க., ஆண்டு கொண்டிருக்கிறது. யார் சிறப்பான ஆட்சியை தந்தது என்பதை, தமிழக மக்கள் சரியாக எடை போட்டு பார்ப்பர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 2006 -- 2011 வரை துணை முதல்வராக இருந்தார். அப்போது, சர்வாதிகாரி போல நடந்தார். தற்போது, புத்தர் போல் வேடமிட்டு, கிராம சபை கூட்டம் நடத்தி பேசுகிறார்.

தி.மு.க., ஆட்சியில், எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, நில அபகரிப்பு நடந்தது. தி.மு.க., ஆட்சியில் மிரட்டி வாங்கப்பட்ட நிலங்களை, ஜெ., ஆட்சிக்கு வந்ததும் மீட்டு, நில உரிமையாளர்களிடம் வழங்கினார். ஸ்டாலின் எப்படி வேஷமிட்டு வந்தாலும், அ.தி.மு.க., தொண்டர்கள், மக்களிடம் தோலுரித்து காட்டுவர்.தி.மு.க., ஆட்சியில், மின் தடையை நீக்க முடியாததால், ஆட்சியை இழந்தனர்.ஜெ., மின் மிகை மாநிலமாக மாற்றினார்.

இது தானே நல்ல ஆட்சியின் அடையாளம். முன்னர் குடும்ப ஆட்சி நடத்திய தி.மு.க.,வினர், மீண்டும் அதிகாரத்தை கையில் எடுத்து, லஞ்ச, லாவண்ய ஆட்சி நடத்த, ஆளாய் பறக்கின்றனர்; அது நடக்காது. எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக முடியாது. தி.மு.க.,வை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதே, எங்கள் நோக்கம். மீண்டும், 2021ல், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது, நம் இலக்காக இருக்க வேண்டும். அதற்கேற்ப செயல்படுங்கள்; ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.

மூலக்கதை