சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பதற்கு 'நோ சான்ஸ் ! '

தினமலர்  தினமலர்
சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பதற்கு நோ சான்ஸ் !

''சசிகலா, தினகரனை, அ.தி.மு.க.,வில் சேர்ப்பதற்கு, 100 சதவீதம் வாய்ப்பே இல்லை,'' என, அடித்து சொல்கிறார், முதல்வர் பழனிசாமி., டில்லியில், நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.டில்லியில், நேற்று பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில், முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். அரை மணி நேர சந்திப்புக்கு பின், முதல்வர் அளித்த பேட்டி:

நான் டில்லி வந்ததற்கு காரணமே, தமிழக வளர்ச்சி திட்டங்கள் தான். நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்தேன். இரு தலைவர்களிடமும், அரசியல் எதுவும் பேசவில்லை. தேர்தல் வருவதற்கு, இன்னும் காலம் உள்ளது. எனவே, அரசியல் ரீதியாக பேசுவதற்கு, இது, சரியான நேரம் அல்ல.

அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் குறித்து, பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு விட்டது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன், அ.தி.மு.க.,வில், சசிகலா இணைவதற்கான வாய்ப்பு, 100 சதவீதம் கிடையாது.அ.தி.மு.க.,வில் தெளிவாக முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி செயல்படுகிறோம். அ.ம.மு.க.,வில் இருந்தவர்கள் எல்லாம், அ.தி.மு.க.,விற்கு வந்து விட்டனர். தற்போது தினகரனுடன், ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். தினகரனை, பல ஆண்டுகளாக, பக்கத்தில் சேர்க்காமல், ஜெ., நீக்கி வைத்திருந்தார். ஜெ., இருக்கும் போதே, அவர் கட்சியில் கிடையாது. இப்பிரச்னை குறித்து, பிரதமர், உள்துறை அமைச்சருடன் பேசியதாக கூறுவதில் உண்மையில்லை.

விவசாயிகளுக்கான நிவாரணம் உள்பட, தமிழக நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசினேன்.தமிழகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள பணிகளை, துவக்கி வைக்க வேண்டும். புதிய பணிகளுக்கு, அடிக்கல் நாட்ட வேண்டும் என, பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்; அவரும் வருவதாக தெரிவித்திருக்கிறார்.இன்னும் பல முக்கிய திட்டங்களுக்கு நிதியுதவி தரும்படி, தனித்தனியே கோரிக்கை மனுக்களை அளித்தேன். சில திட்டங்களை துவக்கி வைக்க, தமிழகம் வரும்படி கேட்டுள்ளேன். பிரதமரும் வருவதாக உறுதியளித்தார்.

மேலும், 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் உள்பட, பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளும் திறக்கப்பட்டுள்ளன. கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், இந்திய அளவில், உயர் கல்வியில், தமிழகம் சிறந்து விளங்குகிறது.கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் துரிதமாக செயல்பட்டு, நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று, தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான், கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம், தமிழகம். பக்கத்து மாநிலங்களை நம்பியிருந்தாலும், குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதால், குளங்கள், ஏரிகள், அணைகளில், அதிக அளவில் மழை நீர் தேக்கப்பட்டுள்ளது.அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள், தற்போது, மழையால் சேதமடைந்துள்ளன. அவை கணக்கெடுக்கப்பட்டு, மத்திய அரசிடம் நிவாரணம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த போது, புயல் நிவாரண நிதியை விரைந்து தரும்படி கேட்டேன். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கும்படியும், வலியுறுத்தினேன்.
இவ்வாறு, முதல்வர் கூறினார்.

மோடி - இ.பி.எஸ்., பேசியது என்ன?




தினகரனின், அ.ம.மு.க.,வை சேர்ப்பது, சசிகலாவை சமாளிப்பது, 'சீட்' ஒதுக்கீடு என, சட்டசபை தேர்தலுக்கு முன், முதல்வர் இ.பி.எஸ்., பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பில், இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை, முதல்வர் இ.பி.எஸ்., சந்தித்த போது, விவாதிக்கப்பட்டவை குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.

தி.மு.க.,வை வீழ்த்த, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., இடையே, எந்த கருத்து வேற்றுமையும் இல்லை. அதே நேரத்தில், அ.ம.மு.க.,வை, அ.தி.மு.க.,வுடன் இணைக்க வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது. அதற்கு, இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தயாராக இல்லை.ஏற்கனவே கட்சியை கைப்பற்ற, தினகரனும், சசிகலாவும் முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், அவர்களை கட்சிக்குள் சேர்த்தால், அது விபரீதமாகி விடும் என்பதே, அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. அதனால், தே.ஜ., கூட்டணியில், அ.ம.மு.க.,வை சேர்த்துக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது; எவ்வளவு தொகுதிகள் பகிர்ந்து கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. வரும் வாரங்களில், அடுத்த சுற்று பேச்சுகளில், இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, வரும், 27ல் விடுதலையாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தினகரன், அடுத்த வாரத்தில், டில்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பா.ஜ., மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

‛என் கருத்து கணிப்பு'



முதல்வர் இ.பி.எஸ்., மேலும் கூறியதாவது: தன் வசதிக்கு ஏற்ப கருத்து கணிப்பு நடத்தி, தனக்கு வேண்டப்பட்ட வகையில், தி.மு.க., வெளியிடுவது வழக்கம். ஆனால், மீண்டும், 3வது முறையாக, அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும் என்பதே, எங்களுடைய கருத்துக் கணிப்பு.ஒவ்வொரு கட்சியும், அந்த கட்சி வளர வேண்டும் என்று தான் நினைக்கும். அடுத்த கட்சி வளர வேண்டும் என்று, நினைக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு கொள்கை உள்ளது. அந்த கொள்கைபடி தான், அவர்கள் பேசுவர். கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. எல்லா கட்சிகளும், தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று, நினைப்பது தவறல்ல. அதற்கு தான் கட்சியை துவக்கி நடத்தி வருகின்றனர்.தேர்தல் அறிவிப்புக்கு பின் தான், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும். 'தாமரை மலரும்' என, பா.ஜ., கூறுவது, அந்த கட்சியின் உரிமை. இதில், தவறு ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கைகள் என்னென்ன?




பிரதமரை சந்தித்த முதல்வர், தமிழக அரசு சார்பில், 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மனு அளித்துள்ளார். அதன் விபரம்:

* கோதாவரி- - காவிரி இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, முன்னுரிமை அடிப்படையில், அதை செயல்படுத்தும்படி, மத்திய நீர்வளத் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

* காவிரி- - குண்டாறு இணைப்பு திட்டம், மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

* காவிரி ஆற்றை துாய்மைப்படுத்தும், ‛நடந்தாய் வாழி காவிரி' திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி, 713.39 கோடி ரூபாயை, விரைவாக வழங்க வேண்டும்.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - 2ம் நிலைக்கு, மொத்த செலவில் பாதியை, மத்திய அரசு வழங்க வேண்டும்.

* சென்னை -- சேலம் இடையே, மாலை மற்றும் இரவு நேரத்தில், விமானங்கள் இயக்க வேண்டும். கோவையிலிருந்து துபாய்க்கு, நேரடி விமான சேவையை துவக்க வேண்டும்.

* 'நிவர் மற்றும் புரெவி' புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தேவையான நிவாரணம் வழங்க, 1,200 கோடி ரூபாய் நிதியுதி அளிக்க வேண்டும்.

* கொப்பரை தேங்காய், குறைந்தபட்ச ஆதார விலையை, கிலோ, 93.60 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

* காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், மருத்துவ கருவிகள் பூங்கா அமைக்கும், தமிழக அரசின் திட்டத்திற்கு, நிதியுதவி அளிக்க வேண்டும். இரண்டு மெகா டெக்ஸ்டைல் பூங்காக்களை, தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

* சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில், ராணுவ தளவாட வளாகம் அமைப்பதாக, மத்திய அரசு அறிவித்ததை, விரைவாக செயல்படுத்த வேண்டும்.

* மீன்வள உட்கட்டமைப்பு நிதியில், மீன்பிடி துறைமுகங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.- நமது டில்லி நிருபர் --

மூலக்கதை