பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி

புதுடெல்லி: நாடுமுழுவதும் ஏழைகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி எப்போது மற்றும் எப்படி கிடைக்கும் என்பதை மத்திய அரசு தெளிப்வுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

தற்போது முன்னுரிமை அடிப்படையில் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலவச கொரோனா தடுப்பூசி யாருக்கு கிடைக்கும், எப்போது மற்றும் எப்படி என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘1. 65 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் வி. ஜி. சோமணி தெரிவித்துள்ளார்.

ஒரு தனிநபருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றால் 82. 5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட முடியும். பிரதமர் மோடி முதலில் முதல் கட்டத்தில் 3 கோடி தடுப்பூசி போடப்படும் என்றார்.

எஞ்சிய 135 கோடி மக்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும். அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்குமா? என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை (ஒரு டோஸ்) ரூ. 200க்கு வழங்குகிறது.

லாப நோக்கம் கருதாமல் தடுப்பூசியை விநியோகம் செய்வதாக அந்நிறுவனம் சொல்கிறது.

ஆனால் சீரம் நிறுவனம் தடுப்பூசியை ரூ. 158க்கு வழங்குவதாக பெல்ஜியத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு தனது தடுப்பூசியை ரூ. 200க்கு ஏன் விற்பனை செய்கிறது? மற்றொரு தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோசுக்கு ரூ. 295க்கு வழங்குகிறது.

இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் உதவியுடன் இந்த தடுப்பூசியை தயாரிக்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. முதல் கட்டத்தில் 375 பேருக்கும், இரண்டாவது கட்டத்தில் 380 பேருக்கும் மட்டுமே கோவாக்சின் வழங்க நிறுவனத்துக்கு அனுமதி உள்ளது.



மேலும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுக்காக பாரத் பயோடெக் காத்திருக்கிறது. ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தடுப்பூசிக்கு (கோவிஷீல்ட்) ரூ. 200 மட்டுமே செலவாகும் போது, இதற்கு (கோவாக்சின்) ஏன் கூடுதல் செலவாகிறது?.

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81. 35 கோடி மக்களுக்கு மானிய விலையில் பெறுவதற்கான உரிமை உண்டு என்பது மத்திய அரசுக்குத் தெரியாதா? தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கள், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமா?

ஆம் எனில், தடுப்பூசிக்கான திட்டம் என்ன, எப்போது இலவச தடுப்பூசி அவர்களுக்கு வழங்கப்படும்?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.


.

மூலக்கதை