விவசாயிகள் டிராக்டர் பேரணியால் திணறியது டெல்லி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகள் டிராக்டர் பேரணியால் திணறியது டெல்லி

புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 42 நாட்களாக போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற 7வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.

புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் இருந்தனர். ஆனால் இந்த சட்டங்களை வாபஸ் பெற முடியாது, திருத்தங்கள் செய்யலாம் என்று கூறி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, மீண்டும் நாளை இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றும் டெல்லியில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாகவும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். இதற்கு முன்னோட்டமாக ஜன. 7ம் தேதி (இன்று) சிங்கு எல்லையில் பெண்கள், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

அதன்படி இன்று காலை 11 மணியளவில் சிங்கு எல்லையில் மேற்கு மற்றும் கிழக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர். மேலும் வேளாண் பொருட்களை ஏற்றி வரும் 500க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களிலும் விவசாயிகள் வந்து குவிந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கு எல்லையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காசியாபாத்தில் இருந்து பல்வால் வரை டிராக்டர்களில் பேரணியாக சென்ற விவசாயிகள், அதே சாலையில் மாலை திரும்ப உள்ளனர்.

விவசாயிகளின் இந்த பேரணியால் டெல்லி எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. டெல்லி போலீசார் எல்லையில் இருந்து நகர்பகுதிகளில் நுழையும் சாலைகளில் நின்று வாகன போக்குவரத்தை மாற்று சாலைகளில் திருப்பி விட்டனர்.

நகரின் முக்கிய நுழைவு சாலையான கிழக்கு பெரிபரல் எக்ஸ்பிரஸ்வேயில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. மேலும் பீல்அக்பர்பூரில் இருந்து சிர்சா வழியாக பல்வால் வரை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், சிர்சாவில் இருந்து வரும் அனைத்து சாலைகளிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதித்து நகர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து டெல்லி நகர் போலீசார் அவ்வப்போது ட்வீட்டரில் அப்டேட் செய்தனர்.

டெல்லி எல்லைகளான சிங்கு, அவசந்தி, மணியாரி மற்றும் சபோலியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் அவசர தேவைக்கு லாம்பூர் மற்றும் சாபியாபாத், ஜிடிகே சாலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் போலீசார் ட்வீட் மூலம் தெரிவித்திருந்தனர். போக்குவரத்து அவ்வப்போது தடை மற்றும் மாற்றம் செய்யப்பட்டதால் டெல்லி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இருப்பினும் பொதுமக்களிடம் பொதுவாக விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவான நிலையே காணப்பட்டது. இன்றைய டிராக்டர் பேரணியில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



அவர்கள் கூறுகையில், ‘‘மத்திய அரசுடன் நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் காலம் வரை போராட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த போராட்டம் ஒத்திகைதான். வரும் 26ம் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் டெல்லி நகருக்குள் பேரணியாக நுழைகிறோம்.

வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெறும் வரை எங்கள் போராட்டங்களை மேலும் மேலும் தீவிரப்படுத்த உள்ளோம்’’ என்றனர்.


.

மூலக்கதை