இந்தியாவில் 2 தடுப்பூசிக்கு அனுமதி: உலக சுகாதார அமைப்பு, பிரதமர் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் 2 தடுப்பூசிக்கு அனுமதி: உலக சுகாதார அமைப்பு, பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: இந்தியாவில் 2 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான அதிகாரபூர்வ அனுமதி அறிவிப்பை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் இன்று அறிவித்தது.

முன்னதாக மேற்கண்ட இரு தடுப்பூசியும் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணர் குழு நேற்று பரிந்துரைத்தது. இந்த கோரிக்கைகளை ஏற்று தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கண்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஆணையர் வி. ஜி. சோமானி கூறுகையில், ‘பாதுகாப்பில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும், நாங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம்.

தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை. லேசான காய்ச்சல், உடல் வலி, ஒவ்வாமை போன்றவை எந்த ஒரு தடுப்பூசிகளுக்கும் பொதுவானவைதான்’ என்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது.

கொரோனா இல்லாத நாடாக இந்தியா உருவாகவுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு எனது நன்றிகள்’ என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் பிராந்திய இயக்குநர் (உலக சுகாதார மையம்) டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் அவசரகால பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிக்காகன அங்கீகாரத்தை உலக சுகாதார மையம் வரவேற்கிறது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையானது, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும். தொற்று தாக்கத்தை குறைப்பதில் முக்கியமாக இருக்கும்’ என்ற தெரிவித்துள்ளார்.

இதேபோல், தடுப்பூசிக்கான அனுமதி மற்றும் அதற்கான பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், டாக்டர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரை முன்னாள் முதல்வர் மாயாவதி, தெலங்கானா நகர்புற மேம்பாட்டு அமைச்சர் கே. டி. ராம ராவ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை