ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர்

தினமலர்  தினமலர்
ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர்

சென்னை :''ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சென்னை, பள்ளிக்கரணை, ஒக்கியம் மடு, முட்டுக்காடு பகுதிகளில், 'நிவர்' புயல் காரணமாக தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணியை முதல்வர் இ.பி.எஸ்., நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பின், அவர் அளித்த பேட்டி:
பருவ காலங்களில் பெய்யும் கன மழையால், ஒவ்வொரு முறையும், சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில், தண்ணீர் தேங்கி, மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண, நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன்.நம்நாட்டில் உள்ள எந்த மாநிலத்திலும், தற்போது நிதி இல்லை. உலக அளவிலும் கிடையாது.

உலக வங்கி திட்டம், மாநில நிதி ஆதாரத்தை பெருக்கி, ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது, பவானிசாகரில் ஆறு இடங்களில், தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பொதுப்பணித் துறையின் கீழ், 14 ஆயிரம் ஏரிகள், உள்ளாட்சி துறையின் கீழ், 26 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இவற்றை ஒரே நேரத்தில், துார் வார முடியாது.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஏரிகளை, துார் வாரி வருகிறோம். இதன் காரணமாக, பல ஏரிகள் இன்று நிரம்பியுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, உபரி நீர் வீணாக வெளியில் செல்வதாக, எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். உபரி நீரை வெளியேற்றியபோது, மதகில் ஒரு கட்டை சிக்கிக் கொண்டது. அதனால், நீர் கசிவு ஏற்பட்டது. தற்போது, கட்டை அகற்றப்பட்டு, மதகு மூடப்பட்டுள்ளது. இதிலும், அரசியல் செய்ய விரும்புவது, வேடிக்கையாக இருக்கிறது.
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறினால், அரசு கேட்கும். ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதற்காக, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

'சென்னைக்கு நிரந்தர தீர்வு'

''சென்னையில், மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்த தீர்வு காணப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி:செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் சேர்கிறது. கடலில் நீர் கலக்கும் முகத்துவாரத்தை, 30 மீட்டரில் இருந்து, ௧௦௦ மீட்டராக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
சதுப்பு நிலத்தை முழுமையாக ஆழப்படுத்த, காலம் அதிகமாகும். எனவே, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலத்தில், ஒக்கியம் மடு வரை, அகலமான பேபி கால்வாய்களை, பொதுப்பணித் துறை உருவாக்கி வருகிறது.
வேளச்சேரி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர், ௪ கி.மீ., சுற்றி, பள்ளிக்கரணை வருகிறது. அதற்கு பதிலாக, 2 கி.மீ., கால்வாய் வழியே, தண்ணீர் நேராக செல்ல திட்டம் வகுக்கப்படும்.தற்போது, கிழக்கு தாம்பரம், மாம்பாக்கம், செம்பாக்கம் போன்ற இடங்களில் இருந்து வரும் மழை நீர், செம்மஞ்சேரி வந்தடைந்து, 15 கி.மீ., தொலைவில், ஒக்கியம் மடு, பக்கிங்ஹாம் கால்வாய், முட்டுக்காடு வழியாக கடலில் கலக்கிறது.இந்த வழித்தடத்தில், விரைவாக வெள்ள நீர் வடிய ஏதுவாக, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் சாலையில் இருந்து நேரடியாக, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்ல, ௫௮௧ கோடி ரூபாயில், பெரிய கால்வாய்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, தென்சென்னை
பகுதிகள் முழுதுக்கும், நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும்.

அதேபோல, மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில், தண்ணீர் தேங்குவதை தடுக்க, திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில், மாற்று கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளை தரம் உயர்த்த, 71.30 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னையில், 2015ல், 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கியது. தற்போது, தண்ணீர் தேங்கும் பகுதி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, இ.பி.எஸ்., கூறினார்.

மூலக்கதை