தேர்தல் பிரசாரத்தை தடுத்தால்.. தி.மு.க., உயர்நிலை குழு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
தேர்தல் பிரசாரத்தை தடுத்தால்.. தி.மு.க., உயர்நிலை குழு எச்சரிக்கை

சென்னை : 'தேர்தல் பிரசாரத்தை தடுத்தால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க., அரசுக்கு எச்சரிக்கை விடுத்து, தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தேர்தல் பிரசாரத்தில், இளைஞரணி செயலர் உதயநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபடவிடாமல் தடுக்கப்படுகிறது.கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து கைது செய்தும், இரவு வரை காவலில் வைத்தும், காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அ.தி.மு.க., அரசின் ஜனநாயக விரோத போக்கும் கண்டிக்கத்தக்கது.தமிழகம் முழுதும், அ.தி.மு.க.,வினர் வெளிப்படையாக அறிவிக்கப்படாத தேர்தல் பிரசார வேலைகள், கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை எதையும் பின்பற்றாமல் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசு விழாவை, தேர்தல் கூட்டணியை அறிவிக்கும் அரசியல் விழாவாக, அ.தி.மு.க., அரசு மாற்றி உள்ளது. அ.தி.மு.க.,விற்கு ஒரு நியாயம், தி.மு.க.,விற்கு அநியாயம் என்ற மாறுபாடான நிலையும், அ.தி.மு.க., ஆட்சியில் கடைப்பிடிக்கப்படுவதை எவராலும் ஏற்க முடியாது.
எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து, தேர்தல் பிரசார பயணம், பொதுமக்கள் ஆதரவுடன் தொடரும். போலீஸ் துறையை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்தால், அதற்கு துணை போகும் போலீஸ் உயர்துறை அதிகாரிகளும், சட்டத்திற்கு புறம்பாக அவர்களை துாண்டும் முதல்வர் இ.பி.எஸ்.,சும், கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என, எச்சரிக்கிறோம்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போலீஸ் உயர் அதிகாரியை மிரட்டும் உதயநிதி பேச்சு



தி.மு.க., சார்பில் நடைபெறும், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பிரசாரத்திற்காக, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், உதயநிதி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். போலீஸ் துறை அனுமதி பெறாமல், தடையை மீறி பிரசாரம் செய்வதால், அவரை போலீசார் கைது செய்து விடுவிக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம், ராஜகிரியில் நடந்த கூட்டத்தில், தேர்தல் பிரசார வேனில், உதயநிதி அமர்ந்திருந்து, பெண் குழந்தைக்கு செந்தாமரை என்ற பெயரை சூட்டினார். அப்போது, உதயநிதியும் முக கவசம் அணியவில்லை; குழந்தையை கொடுக்கிற பெற்றோரும், முக கவசம் அணியாமல் நிற்கின்றனர்.

இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.நாகப்பட்டினம் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், திருவெண்காட்டில் நடந்தது. அப்போது, உதயநிதி, போலீஸ் உயர் அதிகாரியை எச்சரிக்கும் வகையில் பேசிய வீடியோவும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், உதயநிதி பேசியதாவது: அவரு தான் ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ். பெயரெல்லாம், நாங்கள் ஞாபகம் வைத்திருப்போம். இன்னும் ஐந்து மாசம் தான் இருக்கு... எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா...இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

கடந்த கால, தி.மு.க., ஆட்சியில், போலீஸ் துறை உட்பட, அனைத்து துறைகளின் அரசு அதிகாரிகளை, தி.மு.க.,வினர் மிரட்டிய சம்பவங்கள் பல உண்டு.ஆட்சிக்கு வருவதற்கு முன் உதயநிதி, பகிரங்கமாக, போலீஸ் உயர் அதிகாரியின் பெயரை சொல்லி மிரட்டுகிறார் என்றால், ஆட்சிக்கு வந்து விட்டால், தி.மு.க.,வினரின் மிரட்டல் எப்படியிருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை