நிவர் புயலை எதிர்கொள்ள மாநில அரசு உஷார் நிலை!

தினமலர்  தினமலர்
நிவர் புயலை எதிர்கொள்ள மாநில அரசு உஷார் நிலை!

சென்னை : மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே, நாளை கரையை கடக்கும், 'நிவர்' புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு, உஷார் நிலையில் உள்ளது. ஒரு வாரத்திற்கு தேவையான, உணவு பொருட்களை இருப்பு வைக்கவும், மருந்து, மாத்திரகளை கைவசம் வைத்திருக்கவும், அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏழு மாவட்டங்களில், இன்று மதியம் முதல், பஸ் போக்குவரத்தை நிறுத்த, முதல்வர் உத்தர விட்டுள்ளார். மேலும், புயல் மற்றும் மழையால் பாதிக்கக் கூடிய பகுதிகளில், முன்கூட்டியே, 'கரன்ட் கட்' செய்யவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.



வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல், தமிழக கடலோர மாவட்டங்களை சூழ்ந்தபடி, நாளை கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் முழுதும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டு, அரசும், அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர், புயல் கடக்கும் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.இந்நிலையில், புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்வர் வெளியிட்ட அறிக்கை:


* ‛நிவர்' புயலை எதிர்கொள்ள, வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்பு குழுவினர், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முகாமிட வேண்டும்.

* புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டும்.

* பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களுக்கு, உடனடியாக அழைத்து செல்ல வேண்டும்.

* நிவாரண முகாம்களில், குடிநீர், கழிப்பறை, 'ஜெனரேட்டர்' வழியே மின் வசதி, உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான 'காஸ்' அடுப்புகள், 'சிலிண்டர்'கள், சமையலர்கள், பாய், போர்வை போன்றவை இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.

* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு உள்ளேயும், இன்று பகல், 1:00 மணி முதல், பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. பொது மக்களும் தங்கள் சொந்த வாகனங்களில், அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற தேவைகளுக்காக, பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* கடலோர கிராமங்களில், கட்டுமரங்கள், மின் மோட்டார் படகுகள், மீன் வலைகள், ஆகியவற்றை உரிய முறையில், பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர்தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்தேக்க தொட்டகளில், முழுமையாக தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்.

* அனைத்து நீர் நிலைகளிலும், கரை உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய, போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும், தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

* நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல் மூட்டைகள், மழையில் நனையாதபடி பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்து பொருட்கள், பசுந்தீவனங்கள் போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

* நடமாடும் தொலைத்தொடர்பு கருவிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். தொலைத்தொடர்பு பாதிக்காமலிருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மின்வாரியம் சார்பில், பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு, கூடுதலாக, 1,000 பணியாளர்கள், கூடுதல் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை, பிற மாவட்டங்களில் இருந்து பெற்று, தயாராக வைத்திருக்க வேண்டும்.

* கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, அனைத்து நிவாரண முகாம்களிலும், கிருமி நாசினிகள், முகக்கவசங்கள், தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

* தேசிய பேரிடர் மீட்பு படையின் ஆறு பிரிவுகள், கடலுாரிலும், இரு பிரிவுகள், சென்னையிலும், தேவையான கருவிகளுடன் தங்க வைக்கப்பட வேண்டும்.இவை அனைத்தையும், மாவட்ட கலெக்டர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கு வேண்டுகோள்!



* மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம். இன்றும், நாளையும், பெரும் மழை, புயல் வீச இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்களை, நீர் படாத வகையில், பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* 'டார்ச் லைட், 'பேட்டரி', மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை, போதுமான அளவு, இருப்பு வைத்திருக்க வேண்டும். மின் கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு, மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். வீடுகளில் மின் சாதன பொருட்களை, கவனமாக கையாள வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

120 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்வானிலை ஆய்வு மையம் தகவல்



‛நிவர்' புயல் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று பகல் நிலவரப்படி, புதுச்சேரியில் இருந்து தென் கிழக்கில், 520 கிலோ மீட்டர் மற்றும் சென்னையிலிருந்து தென் கிழக்கே, 560 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நகர்ந்து, தமிழக கடற்கரையை நோக்கி வருகிறது.இது, இன்று புயலாகவும், பின், தீவிர புயலாகவும் வலுவடையும். இந்த தீவிர புயல், தற்போதைய நிலவரப்படி, வடமேற்கு திசையில், தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது. இந்த புயல், நாளை பிற்பகலில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

120 கி.மீ., வேகம்இன்று, 55 கி.மீ., வேகத்துக்கும் மேல் சூறாவளி காற்று வீசும். நாளை, நிவர் புயல் கரையை கடக்கும் போது, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி முதல், தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரை, கடலோர மாவட்டங்களில், சூறாவளி காற்று மணிக்கு, 120 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும். புயல் காரணமாக, கடலின் நீர்மட்டம் வழக்கத்தை விட, இரண்டு மீட்டர் வரை உயரும். தாழ்வான இடங்களுக்குள் கடல்நீர் உட்புகுவதற்கான வாய்ப்புள்ளது. கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் கடல் பகுதிகளுக்குள், எந்த காரணத்தைக் கொண்டும் செல்லக் கூடாது.கடலுக்குள் இருக்கும் மீனவர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில், உடனடியாக கரை ஏற வேண்டும்.

'புயல் கடக்கும் போது மின் சப்ளை நிறுத்தம்'



''புயலை எதிர்கொள்ள மின் வாரியம் தயாராக உள்ளது; மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், புயல் கரையை கடக்கும் பகுதிகளில், மின் வினியோகம் நிறுத்தப்படும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் -- காரைக்கால் இடையே, நாளை கரையை கடக்கும், 'நிவர்' புயலின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய உயரதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின், தங்கமணி அளித்த பேட்டி:

மாமல்லபுரம் -- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்பதால், அங்குள்ள மாவட்டங்களில், தேவையான அளவு மின் கம்பங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மின் வாரிய ஊழியர்களும் தயாராக இருப்பர்.
எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கு, உடனே ஊழியர்களை அனுப்பி, விரைவாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, 1.50 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.

மக்கள் பாதுகாப்பு தான், எங்களுக்கு முக்கியம். எனவே, புயல் கரையை கடக்கும் போது, மின் வினியோகம் நிறுத்தப்படும். புயல் கரையை கடந்த பின், பாதிப்பை சரிபார்த்து, மீண்டும், மின் வினியோகம் வழங்கப்படும். இதனால், மின் வெட்டு என்று யாரும் நினைக்க கூடாது.
'கஜா' புயலின் போது, 3.30 லட்சம் மின் கம்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவை, உடனுக்குடன் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது. புயல் எவ்வளவு வேகமாக வீசினாலும், அதை உடனே எதிர்கொள்ள, மின் வாரியம் தயாராக உள்ளது.
மற்ற பகுதிகளில் இருந்து, ஊழியர்களை அழைத்து வரவும், உபகரணங்களை எடுத்து வரவும் வாகனங்களும் தயாராக உள்ளன. இந்த ஆண்டில் மட்டும், 60 ஆயிரம் சேதமடைந்த கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை நிலவரம்



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் சில பகுதிகளில் கன மழையும், சில பகுதிகளில் மிக கன மழையும் பெய்யும். புயல் மற்றும் மழை குறித்து, மத்திய, மாநில அரசு துறைகளுக்கு, தொடர்ந்து, முன்னெச்சரிக்கை தகவல்கள் அளிக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

11 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை!



சென்னை, கடலூர், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது, கடல் சூழ்நிலை அசாதாரண நிலையிலும், சூறாவளி காற்றுடனும் இருப்பதை அறிவிக்கும் வகையில், மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

‛ரெட், ஆரஞ்ச் அலர்ட்'



நிவர் புயலால், எங்கெங்கு, எவ்வளவு மழை பெய்யும் என்பதை, நிறங்கள் வழியே எச்சரிக்கை செய்து, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிக கன மழைக்கு, ஆரஞ்ச் நிறமும், மிக அதிக கன மழைக்கு, சிவப்பு நிறமும் வழங்கப்பட்டு, மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன் விபரம்:

* இன்றுநாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், மிக அதிக கனமழை பெய்யும்.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலுார், புதுக்கோட்டை, கடலுார் மற்றும் விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அதிக கன மழை பெய்யும். கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் ராயலசீமா பகுதிகளிலும், அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

* நாளைநாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலுார், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள்; புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிக அதிக கன மழை பெய்யும்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதிக கன மழை பெய்யும்.

ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், கேரளா, தெலுங்கானா மற்றும் தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலும், கன மழை பெய்யும்.

* நாளை மறுநாள்ஆந்திரா, ராயலசீமா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும்.

மூலக்கதை