கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட் 'செம டோஸ்'

தினமலர்  தினமலர்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட் செம டோஸ்

புதுடில்லி : 'நாடு முழுதும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, டில்லி, மஹாராஷ்டிரா, குஜராத் அரசுகள் மீது கடும் அதிருப்தியை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது, உரிய சிகிச்சை அளிப்பது, உயிரிழந்தோருக்கு உரிய தகனம் செய்வது தொடர்பாக, பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக, ஜூன், 19ல் விரிவான உத்தரவை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. நிபுணர் குழுக்களை அமைப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அது செய்திருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள், அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:

இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநிலங்கள் நடைமுறைபடுத்தியுள்ளன. ஆனாலும், சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. டில்லி மிகவும் மோசமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் நவ.,ல் அதிகரித்துள்ளது. டிச.,ல் மேலும் மோசமாகலாம். குஜராத்தில் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளது.வைரஸ் பரவலைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநிலங்களும், மதிய அரசும், இரண்டு நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, வரும், 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

4.43 லட்சம் பேருக்கு சிகிச்சை



கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 8.50 லட்சம் பேரிடம் கொரோனா கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, 44 ஆயிரத்து, 059 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 91 லட்சத்து, 39 ஆயிரத்து, 641 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 4.43 லட்சம் பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில், 4.85 சதவீதமாகும்.வைரஸ் பாதிப்பில் இருந்து, 85 லட்சத்து, 62 ஆயிரத்து, 641 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம் 93.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால், நேற்று ஒரே நாளில், 511 பேர் இறந்துள்ளனர். டில்லியில், 121; மஹாராஷ்டிராவில், 50; மேற்கு வங்கத்தில், 49; உத்தர பிரதேசத்தில், 35; கேரளாவில், 27 மற்றும் ஹரியானாவில், 25 இறப்புகள் பதிவாகி உள்ளன.

இவர்களுடன், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 738 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.46 சதவீதமாக குறைந்துள்ளது.பலியானோர் எண்ணிக்கையில், 46 ஆயிரத்து, 623 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, 11 ஆயிரத்து, 654 பேருடனும், தமிழகம், 11 ஆயிரத்து, 605 பேருடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கொரோனா பாதிப்பை கண்டறிய, நேற்று வரை, 13.25 கோடி பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை