மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரங்களில் சிபிஐ-யை ‘பீடா’ கடையாக மாற்றிய மத்திய பாஜ அரசு: மகாராஷ்டிரா அமைச்சர் பரபரப்பு குற்றசாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரங்களில் சிபிஐயை ‘பீடா’ கடையாக மாற்றிய மத்திய பாஜ அரசு: மகாராஷ்டிரா அமைச்சர் பரபரப்பு குற்றசாட்டு

மும்பை: மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரங்களில் சிபிஐ-யை ‘பீடா’ கடையாக மத்திய பாஜ அரசு மாற்றியது என்று, மகாராஷ்டிரா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரிகள்  உள்ளிட்ட சில நபர்கள் மீதான வழக்கை சிபிஐ  விசாரித்தது.

ஆனால், மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் இந்த வழக்கை சிபிஐ  விசாரிப்பதாக எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது. இம்மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  அவர்கள் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர்,  பி. ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.



நேற்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கூட்டாட்சித் தத்துவம்  என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும்.   மாநிலத்தின் அதிகார வரம்புக்கு உள்பட்ட விவகாரங்களில் விசாரணை  மேற்கொள்ளும்போது அதற்கான அனுமதியை சிபிஐ பெற வேண்டியது கட்டாயமாகும். டெல்லி  சிறப்பு காவல் அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சிபிஐ செயல்பட்டு வருகிறது.

அச்சட்டத்தின் 5வது பிரிவானது டெல்லி உள்பட நாட்டின் எந்தவொரு  பகுதியிலும் சிபிஐ தனது அதிகார வரம்பை நீட்டித்துக் கொள்வதற்கு அனுமதி  வழங்குகிறது. ஆனால், அதே சட்டத்தின் 6வது பிரிவானது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலைப் பெறாமல் சிபிஐ தனது விசாரணை வரம்பை நீட்டிப்பதற்குத் தடை  விதிக்கிறது’ என்று கூறப்பட்டது.



உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பால், சிபிஐ விசாரணைக்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்பது தெளிவாகி உள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக் கூறுகையில், ‘மத்திய பாஜக அரசாங்கத்தில், சிபிஐ ஒரு பான் கடையாக (வெற்றிலை, பாக்கு, பான்மசாலா போன்றவற்றை விற்கும் பீடா கடை) மாறிவிட்டது.

சிபிஐ அமைப்பானது நாட்டின் எந்த பகுதிக்கும் சென்று, யார் மீதும் வழக்கு பதிவு செய்கிறது. குறிப்பாக பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்.



கடந்த சில வாரங்களுக்கு முன், பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்,  சட்டீஸ்கர் ஆகிய மாநில அரசுகள், சிபிஐ-க்கு வழங்கியிருந்த பொதுவான அனுமதியை திரும்பப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை