அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குக : தமிழக ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் நேரில் கோரிக்கை

தினகரன்  தினகரன்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குக : தமிழக ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் நேரில் கோரிக்கை

சென்னை : மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநரிடம் அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தி வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. நீட் தேர்வு அதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதாவது, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது.சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 1 மாதத்திற்கு மேல் ஆகியும், இன்னும் இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுநரின் முடிவு வரும் வரையில் கலந்தாய்வு நடத்தப்படாது என நீதிமன்றத்தில் அரசு உறுதியளித்திருக்கிறது.இந்த நிலையில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அமைச்சர்கள் கே.பி அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். ஆளுநருக்கு அழுத்தம் தந்து விரைந்து ஒப்புதல் தர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மூலக்கதை