ஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு

தினமலர்  தினமலர்
ஜே.என்.யு., கட்டணம் குறைப்பு மாணவர்கள் ஏற்க மறுப்பு

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜே.என்.யு. எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலை விடுதிக்காக உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள் 'போராட்டம் தொடரும்' என அறிவித்துள்ளனர்.


டில்லியில் புகழ்பெற்ற ஜே.என்.யு.வில் விடுதிக்கான கட்டணங்கள் சமீபத்தில் உயர்த்தப்பட்டன. அதை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆறு மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில் விடுதிக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நேற்று அறிவித்துள்ளது. இதை மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலர் ஆர். சுப்பிரமணியம் சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.

இரண்டு படுக்கை கொண்ட அறைக்கு ஒரு மாணவருக்கான மாதக் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒருவர் தங்கும் அறைக்கான மாதக் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்தப்பட்டது. அது 200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இந்தக் கட்டணக் குறைப்பை ஏற்க மாணவர்கள் மறுத்துள்ளனர். விடுதிக்கான கட்டணத்தை உயர்த்துவது ஆடை கட்டுப்பாடு மாணவர் நடமாடும் நேரம் போன்றவற்றை இறுதி செய்யும் குழுவில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் தொடரும் என மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

மூலக்கதை