கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு

புதுடில்லி : கர்நாடகாவில், 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எனினும், 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட, அவர்களுக்கு, அப்போதைய சபாநாயகர் விதித்த தடையை ரத்து செய்த நீதிபதிகள், அவர்கள், தேர்தலில் போட்டியிடலாம் என, அறிவித்தனர்.

கர்நாடகாவில், கடந்த ஆண்டு, மே மாதம், சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.மொத்தம் உள்ள, 224 தொகுதிகளில், 104ல், பா.ஜ., வெற்றி பெற்றது. காங்கிரஸ், 80 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம், 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. படுதோல்விதனிப்பெரும் கட்சியான, பா.ஜ., முதலில் ஆட்சி அமைத்து, பின், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகியது.

இதையடுத்து, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி, முதல்வராக பதவியேற்றார்.கடந்த, ஏப்ரல் - மே மாதத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில், காங்., - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி படுதோல்வியடைந்தது. இதையடுத்து, கூட்டணியில் விரிசல் ஏற்பட துவங்கியது. கடந்த ஜூலை மாதம், காங்கிரசை சேர்ந்த, 14 எம்.எல்.ஏ.,க்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த, மூன்று எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், இந்த ராஜினாமாவை, அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதையடுத்து, ஜூலை, 23ல், சட்டசபையில், குமாரசாமி அரசு மீது, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.

இதில், பதவியை ராஜினாமா செய்த, 17 எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்கவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு தோல்வியடைந்ததையடுத்து, எடியூரப்பா தலைமையில், பா.ஜ., அரசு பதவியேற்றது.நம்பிக்கை ஒட்டெடுப்பில் பங்கேற்க வேண்டும் என, காங்., மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவிட்டும், அதை மீறியதற்காக, 17 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.கர்நாடகா சட்டசபையின் பதவி காலம், 2023ல் முடிகிறது.

அதுவரை தேர்தலில் போட்டியிடவும், 17 எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை விதித்தார். தீர்ப்பு ஒத்தி வைப்புதகுதி நீக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றை எதிர்த்து, 17 எம்.எல்.ஏ.,க்களும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:இந்த வழக்கை பொறுத்தவரை, 17 எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் கட்சி கொறடா உத்தரவை மீறியுள்ளனர்.

அவர்கள் மீது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க முடியும். அதனால், 17 எம்,எல்,ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.ஆனால், அவர்கள், சட்டசபையின் பதவிக்காலம் முடியும் வரை, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை ஏற்க முடியாது. அதனால், தேர்தலில் போட்டியிட, 17 எம்.எல்.ஏ.,க்களுக்கும் விதிக்கப்பட்ட தடை, ரத்து செய்யப்படுகிறது.அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அமைச்சர் உட்பட எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை.

ஏனெனில், இது, சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் வராது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.'எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று, கர்நாடக மாநில காங்., தலைவர், தினேஷ் குண்டு ராவ் கூறியதாவதுதகுதி நீக்க வழக்கில், காங்., நிலையை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால், கர்நாடகாவில், சட்ட விரோதமாக அமைந்துள்ள, பா.ஜ., ஆட்சியை ரத்து செய்ய வேண்டும். பா.ஜ.,வுக்கு அரசியல் நாகரீகம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஆகியவை இருந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது.

வாய்ப்பு வழங்கினால், 17 பேருக்கும், மக்கள் பாடம் கற்பிப்பர். இவ்வாறு, அவர் கூறினார். சபாநாயகர்களின் செயல்பாடுகளில் அதிருப்திஎம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, சபாநாயகரின் செயல்பாடுகள் பற்றி கூறியதாவது:சபாநாயகர் நடுநிலையாகவும், எந்த கட்சி சார்பும் இல்லாமலும் செயல்பட வேண்டும்; சட்டசபையை நடத்தும் போதும், மனுக்களை பரிசீலனைக்கு எடுக்கும் போதும், சுயமாக, தனித்து செயல்பட வேண்டும்.

அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள கடமையைப் பின்பற்றி, சபாநாயகர் செயல்பட வேண்டும். அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் சார்பு இல்லாமல், அதன் குறுக்கீடுகள் இல்லாமல், மனுக்களின் மீது நீதி வழங்க வேண்டும்.தான் சார்ந்திருக்கும் கட்சியின் தொடர்பை சபாநாயகர் துண்டிக்காவிட்டால், அவரின் செயல்பாடுகள் நடுநிலைத்தன்மை, சுதந்திரமான செயல்பாட்டின் சாராம்சத்துக்கு விரோதமாக அமைந்து விடும். அவர், அவ்வாறு நடக்காமல், செயல்பட வேண்டும். ஆனால், சமீபகாலமாக, எந்த வழக்கை எடுத்தாலும், நடுநிலையுடன் செயல்படுதல் என்ற அரசியலமைப்பு கடமைக்கு எதிராகவே, சபாநாயகர்கள் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது.

அரசியல் கட்சிகள், குதிரை பேரம், ஊழல் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவதால், மக்களுக்கு, நிலையான அரசு அமைவது மறுக்கப்படுகிறது.அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின், 10-வது பட்டியலை வலுப்படுத்துவது குறித்து, பார்லிமென்ட் பரிசீலிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்துக்கு விரோதமான போக்குகள், வழக்கங்கள், செயல்கள் குறைக்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

காங்., கோரிக்கை நிராகரிப்புஎம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையின் போது, கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் செயல், அரசியல் சட்டத்துக்கு செய்யப்பட்ட துரோகம். 'கட்சி உத்தரவை மீறும், கட்சி தாவும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை ஊக்கப்படுத்தக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், ஆட்சி கவிழ்ப்பு போன்ற செயல்கள் தடுக்கப்படும்' என்றார்.

இதற்கு, நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில் அளித்த பதிலில் கூறியிருந்ததாவது:கட்சி தாவும், எம்.எல்.ஏ., க்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி, நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அந்த அதிகாரம், பார்லிமென்டிடம் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட்டால், அது, தவறாகிவிடும். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். தேர்தல் நடக்க வாய்ப்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளில், இரு தொகுதிகளை தவிர, மற்ற, 15 சட்டசபை தொகுதிகளுக்கும், அக்., 21ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதற்கான மனு தாக்கலும் துவங்கி, ஐந்து நாட்கள் நடந்தது. இதை எதிர்த்து, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இடைத்தேர்தலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், டிச., 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென, தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்தது. இப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தேர்தலில் போட்டியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, டிச., 5ம் தேதி இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களும், இன்று பா.ஜ.,வில் சேருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை