பள்ளி வாசலில் தற்காலிக பஸ் ஸ்டாப் திருமங்கலத்தில் போலீசாரை கண்டித்து மக்கள் திடீர் மறியல்: 100 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பள்ளி வாசலில் தற்காலிக பஸ் ஸ்டாப் திருமங்கலத்தில் போலீசாரை கண்டித்து மக்கள் திடீர் மறியல்: 100 பேர் கைது

அண்ணாநகர்: திருமங்கலத்தில் போலீசாரை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை திருமங்கலம் சாலையில் செயல்பட்டுவரும் மத்திய அரசு பள்ளியின் பிரதான நுழைவுவாயிலின் முன் கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிக மாநகர பஸ் நிறுத்தத்தை போலீசார் ஏற்படுத்தினர்.

இதனால் அந்த பள்ளியில் படித்துவருகின்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி வளாகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தை அகற்றும்படி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், காவல் துறையை கண்டித்து பள்ளி வளாகத்தின் முன் உள்ள பஸ் நிறுத்தம் அமைந்துள்ள திருமங்கலம் சாலையில் இன்று காலை 9 மணியளவில் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவரும் வழக்கறிஞருமான தங்க. சாந்தகுமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘இந்த பள்ளியின் அருகே திருமங்கலம் சாலையில் இதுவரை 7 விபத்துகள் நடந்துள்ளது. எனினும், வேகத்தடை அமைக்காமல் போலீசார் அலட்சியமாக உள்ளனர்’ என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதன்பிறகு சாலை மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே போலீசாரின் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


.

மூலக்கதை