அரசு கல்லூரி மாணவர் தற்கொலை: கஞ்சா கும்பல் காரணமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு கல்லூரி மாணவர் தற்கொலை: கஞ்சா கும்பல் காரணமா?

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை வழுதூர் பகுதியை ேசர்ந்தவர் சந்திரிகா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் அவரது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் ரெதீஷ்குமார் (20).

வளர்ப்பு தாய் கிரிஜாவுடன் வசித்து வந்தார். தற்போது திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில்,  சில மாதங்களுக்கு முன்பு நெய்யாற்றின்கரையில் ரெதீஷ்குமார் வீட்டருகே கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கலால்துறையினர் கைது செய்தனர். கஞ்சா விற்பனை குறித்து ரெதீஷ்குமார் தகவல் கொடுத்திருக்கலாம் என அந்த கும்பலுக்கு சந்ேதகம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அந்த கும்பல் ரெதீஷ்குமாரை தாக்கியது.

அதன்பின் அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரையும் ஒரு கும்பல் தீவைத்து எரிக்க முயன்றது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் கிரிஜா நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த கஞ்சா கும்பலுக்கு பயந்து கிரிஜா தனது வளர்ப்பு மகனை அழைத்துக்கொண்டு திருவனந்தபுரம் காரியம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வகுப்பு முடிந்து ரெதீஷ்குமார் வீடு திரும்பவில்லை. இதையடுத்து வளர்ப்பு தாய் கிரிஜா பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை.

பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் புகார் செய்தார். இதையடுத்து காரியம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெதீஷ்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கல்லூரி கழிப்பறையில் ரெதீஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரெதீஷ்குமார் சாவில் மர்மம் இருப்பதாகவும், கஞ்சா கும்பல்தான் இதற்கு காரணம் எனவும் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5 மாதங்களில் திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறப்பது இது 2வது முறையாகும்.

.

மூலக்கதை