அயோத்தி தீர்ப்பு: அரசியல் தலைவர்கள் வரவேற்பு

தினமலர்  தினமலர்
அயோத்தி தீர்ப்பு: அரசியல் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: 'அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, அனைவரும் ஏற்று, சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும்' என, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதன் விவரம்:

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வு கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே, தீர்ப்பு வழங்கிய பின், அதை எந்தவித விருப்பு, வெறுப்புக்கு உட்படுத்தாமல், அனைத்து தரப்பினரும், சமமான சிந்தனையுடன் ஏற்க வேண்டும். மத நல்லிணக்கத்தை போற்றி, நாட்டின் பன்முகத் தன்மைக்கு, எவ்வித சேதாரமும் ஏற்பட்டு விடாமல், எச்சரிக்கை உணர்வுடன், முன்னெடுத்து செல்ல வேண்டும்.

பா.ஜ., முன்னாள் தலைவர் இல.கணேசன்: மத்திய அரசு அறக்கட்டளை நிறுவி, அதன் வழியே, விரைந்து செயல்பட்டு, நான்கு மாதங்களுக்குள், அயோத்தி தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் வகையில், தீர்ப்பு அமைந்துள்ளது. நல்லதொரு தீர்ப்பு; நல்லதொரு நிகழ்வு.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அயோத்தி தீர்ப்பு, யாருக்கும் வெற்றி அல்ல; யாருக்கும் தோல்வி அல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, இரு சகோதரர்களுக்கு இடையிலான, நில உரிமை குறித்த வழக்கில், யாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், அது, அவர்களுக்கு இடையிலான உறவை பாதிக்காது. அதேபோல, இந்த தீர்ப்பு, ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவை பாதித்து விடக் கூடாது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், தீர்ப்பு தங்களுக்கு மனநிறைவு அளிக்காவிட்டாலும், அதை, தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளன. இது, மிகவும் ஆரோக்கியமான, முதிர்ச்சியான அணுகுமுறை. தீர்ப்பு குறித்த விவாதங்கள், வெறுப்பை விதைக்கவே பயன்படும். எனவே, விவாதங்களை தவிர்த்து, தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை, குறித்த காலக்கெடுவிற்குள், மத்திய அரசு அமைக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட, முக்கியமான பகுதியில், 5 ஏக்கர் நிலத்தை வழங்க, மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: சிறுபான்மை மக்களுக்கு அரணாக, நாட்டின் பெரும்பான்மை மக்கள் இருப்பதை, கடந்த கால வரலாறு காட்டுகிறது. மதங்களை கடந்த, மனிதநேய உணர்வு, இந்த மண்ணில் கலந்து இருக்கிறது. எனவே, மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்து விடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை, அனைத்து தரப்பினருக்கும் இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பிரச்னைக்கு ஒரு தீர்வை கொடுத்திருந்தாலும், அதன் மீது, பல கேள்விகளும் எழுகின்றன. மசூதியை இடித்தவர்கள் மீது, தொடுக்கப்பட்ட வழக்கை விரைந்து நடத்தி, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் தேவையை, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அந்த சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும். எந்த ஒரு மத வழிபாட்டு தலம் மீதும், புதிய சர்ச்சையை கிளப்ப, அனுமதித்தல் கூடாது. மத நல்லிணக்கத்தையும், மதச் சார்பின்மையையும் பாதுகாப்பதே, நம் முன் உள்ள முக்கியமான கடமை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்: பாபர் மஸ்ஜித் - ராமஜென்ம பூமி இடம் சம்பந்தமான, நீண்ட நாள் வழக்கிற்கு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விட்டது. ஐந்து நீதிபதிகளும், ஒரே விதமான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்திய ஜனநாயகத்தில், சட்டப் பிரச்னைக்கு, இறுதி முடிவு அளிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது இறுதியானது. தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும், ஒவ்வொரு அம்சம் குறித்த வாதப் பிரதிவாதம், இன்றைய தேவை இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும், அதை ஏற்பதும், அதை நடைமுறைப்படுத்த, எல்லாரும் உடன்பட்டு ஒத்துழைப்பதும், இன்றைய காலத்தின் கட்டாய தேவை. இந்திய மக்கள் அனைவரும், இதயப்பூர்வமாக இணைந்து வாழும், சமூக சுமுகத்தை உருவாக்கப் பாடுபடுவதே, எல்லாருடைய தேசிய கடமையாக கொள்ள வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அயோத்தி வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுாறு ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கிறது. அந்த தீர்வை, தமிழக காங்கிரஸ் கட்சி, தலைவணங்கி ஏற்கிறது. தேசியக் கொடிக்கு, நாம் மரியாதை செலுத்துவது போல, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், மரியாதை செலுத்த வேண்டும். அவரவர் வணங்கும் கடவுளின் பெயரால், இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்று, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக, இந்திய சமுதாயம் திகழ வேண்டும்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: அயோத்தி வழக்கில், நாட்டின் உயரிய சட்ட அமைப்பான, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, தீர்ப்பாக மட்டும் கருதி, அனைத்து தரப்பினரும் அணுக வேண்டும். இந்த நேரத்தில், அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்கு பாதிப்பில்லாமல், அவரவர் நம்பிக்கையை போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம்.

த.மா.கா., தலைவர் வாசன்: நல்ல கலாசாரத்தை பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை, இதில் யாரும் பேசக் கூடாது. கட்சிகளை தாண்டி, மதங்களை தாண்டி, ஜாதிகளை தாண்டி, சட்ட ரீதியாக ஒரு முடிவு, இந்த பிரச்னைக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: அயோத்தியில், ராமர் கோவில் கட்ட அனுமதி தந்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதேநேரத்தில், முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டிற்கு மசூதி கட்ட, 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கி உள்ளது; இதை வரவேற்கிறோம். இதை சரியான புரிந்துணர்வோடு, அனைத்து மக்களும் ஏற்க வேண்டும். நாட்டில் பொது அமைதிக்கு, தேச ஒற்றுமைக்கு, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

பா.ஜ., தேசிய செயலர், ஹெச்.ராஜா: இது, அனைத்து தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் தீர்ப்பு. ராமர் கோவில் கட்டுவதற்கான துாண்கள், சிற்பங்கள் அனைத்தும் தயாராகவே உள்ளன. விரைவில், ராமருக்கு கோவில் கட்டப்படும். இந்த தீர்ப்பானது, நீ வெற்றியா, நான் வெற்றியா என்பது அல்ல; இந்திய அரசியலமைப்பு சட்டமே, வெற்றி பெற்றுள்ளதாக கருதுகிறேன்.

தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த்: பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, அயோத்தி வழக்கு தீர்ப்பு, அனைத்து மதத்தினராலும், அனைவராலும் வரவேற்கக் கூடிய தீர்ப்பாக இருக்கிறது. இந்த தீர்ப்பை, அனைவரும் மத நல்லிணக்கத்தை மனதில் வைத்து வரவேற்போம். பொது மக்களுக்கும், பொது உடைமைகளுக்கும், எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில், மத்திய - மாநில அரசுகள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஹிந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து, மொத்த இடத்தையும், அவர்களுக்கே வழங்கியிருப்பது, அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது. ராமர் கோவிலை கட்ட, மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதைப் போல, பாபர் மசூதியை கட்டவும், ஏன் அறக்கட்டளை நிறுவக் கூடாது? இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

முஸ்லிம் தலைவர்கள் அதிருப்தி:


த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா: சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், நம்பிக்கையுள்ள சிறுபான்மை மக்களுக்கு, மிகப்பெரும் ஏமாற்றத்தை, இந்த தீர்ப்பு அளித்துள்ளது. இது, மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். பாபர் பள்ளிவாசல் இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக, தண்டனை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா: சட்டத்தின் அடிப்படையில், ஆதாரத்தின் அடிப்படையில், அளிக்கப்பட்ட தீர்ப்பாக இல்லாமல், சில அரசியல் தலையீட்டின் காரணமாக வழங்கப்பட்ட தீர்ப்பாக பார்க்க முடிகிறது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும், சட்டத்தை மதிக்க வேண்டியது, நம் அனைவரின் கடமை. அந்த வகையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள, தீர்ப்பை ஏற்று, அனைத்து முஸ்லிம்களும் அமைதி காத்து, நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநிலத் தலைவர் முபாரக்: தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இது குறித்து, அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் மற்றும் டில்லியில் உள்ள அமைப்புகளின் தலைவர்களோடு கலந்து, அவர்களின் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு, எஸ்.டி.பி.ஐ., கட்சி ஒத்துழைக்கும். லிபரான் கமிஷனால் சுட்டிக்காட்டப்பட்ட, 65 குற்றவாளிகளையும், உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறி உள்ளனர்.

ஆர்ஆர்.கோபால்ஜி அறிக்கை


''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை,'' என, வி.ஹெ.பி., தமிழக பொதுச்செயலர், ஆர்.ஆர்.கோபால்ஜி கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நுாற்றாண்டுகளாக சர்ச்சை நிலவிய ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம், தெளிவான தீர்ப்பின் வழியாக, நிரந்தர தீர்வை கொடுத்திருக்கிறது. உணர்ச்சி பூர்வமான வழக்கில், அக்கறையுடன், முறையான திட்டத்துடன் விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நாட்டுக்கு மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார். அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற, ஐந்து நீதிபதிகளும், ஒருமித்த தீர்ப்பாக வழங்கியிருப்பது, விவாதங்களை வளர விடாமல், முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, சட்டவிரோதம் என கண்டித்த நீதிமன்றம், அந்த இடத்தில், ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டது. பாபர் மசூதியின் கீழே இருந்த கட்டடம், ஒரு இஸ்லாமிய கட்டடம் அல்ல என, தொல்லியல் துறை தந்த ஆதாரத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். நீதிபதிகள் தந்திருக்கும் தீர்ப்பை ஏற்று, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. தேவையற்ற கருத்துப் பரிமாற்றம், விவாதங்களின் மூலம், சமுதாயத்தில் அமைதியை சீர்குலைக்காமல், இந்த தீர்ப்பை கடந்து செல்லும் முதிர்ச்சியுடன், அனைவரும் நடந்து கொள்வோம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை மதிக்க வேண்டும்: ரஜினி


தீர்ப்பு குறித்து, ரஜினி அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து, இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, நேற்று முன்தினம், ரஜினி, 'தீர்ப்பு எப்படி இருந்தாலும், மக்கள் ஏற்க வேண்டும்' என, கூறியிருந்தார்.

மூலக்கதை