குடும்பத்துடன் வீரர்கள் 100 நாள் தங்கும் திட்டம் அமித் ஷா உத்தரவை அமல்படுத்த உயர்குழு

தினகரன்  தினகரன்
குடும்பத்துடன் வீரர்கள் 100 நாள் தங்கும் திட்டம் அமித் ஷா உத்தரவை அமல்படுத்த உயர்குழு

புதுடெல்லி : மத்திய ஆயுதப்படை போலீசார் ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அமித்ஷாவின் உத்தரவை அமல்படுத்த உயர்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவில் மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ், எஸ்எஸ்பி மற்றும் அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் உள்ளன. இதில் மொத்தம் 7 லட்சம் வீரர்கள் உள்ளனர்.. பெரும்பாலும் இவர்கள் பணிநிமித்தம் காரணமாக சொந்த ஊர்களில் தங்க முடிவதில்லை. இப்படைப் பிரிவுகளில் உள்ள வீரர் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 75 நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் சேர்ந்திருக்க முடிகிறது. ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றினால் அவர் தனது பணிக்காலத்தில் 5 ஆண்டுகள் மட்டுமே குடும்பத்தினருடன் இருக்க முடியும். இதனால் வீரர்கள் கடும் மனஉளைச்சல் அடைகின்றனர்.இப்பிரச்னையை தீர்க்க, குறைந்தபட்சம் 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கியிருக்க வழிவகை செய்யவும்,  அதற்காக படையில் போதுமான புதிய வீரர்களை நியமிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் வலியுறுத்தி இருந்தார். இதை அமல்படுத்த, சிஆர்பிஎப் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இது,  4 வாரத்தில் பரிந்துரை அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அமல்படுத்தப்பட்டால், வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலேயே பணி அமர்த்தப்படுவார்கள் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை