இரிடியம் தருவதாக மோசடி 5 பேர் கும்பல் அதிரடி கைது: ரூ59 லட்சம் பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரிடியம் தருவதாக மோசடி 5 பேர் கும்பல் அதிரடி கைது: ரூ59 லட்சம் பறிமுதல்

திருப்பதி: விண்வெளி ஆராய்ச்சிக்கு தொடர்புள்ள அதிக மதிப்புள்ள இரிடியம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தெலங்கானா மாநிலம், மெகபூப் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரரெட்டி. இவர் தனது ரூ40 லட்சத்தை ஒரு கும்பல் பறித்துச் சென்றதாக திருப்பதி அலிபிரி போலீசில் புகார் அளித்தார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த ரவிகிஷோர் என்பவரும் தனக்கு சக்தி வாய்ந்த இரிடியம் அளிப்பதாக கூறி ஒரு கும்பல் ரூ19 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். இப்புகார்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இதில் தொடர்புடையவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட்டராமன்(60), முகேஷ்(28), சித்தூர் மாவட்டம் சித்தப்பா(41), பெங்களூருவைச் சேர்ந்த சுனில் (43), சிராலா பகுதியை சேர்ந்த பிரசாத்(34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து  போலீசார் நேற்று அவர்கள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருப்பதி எஸ்பி கஜராவ்பூபால் கூறியதாவது: கைதான கும்பல் வசதியானவர்களை குறி வைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி அவர்கள்,  தங்களிடம் சக்தி வாய்ந்த இரிடியம் உள்ளது.    இது காந்த சக்தி கொண்டது. விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய  பங்கு வகிப்பது.

இதற்கு உள்நாடு, வெளிநாடுகளில் அதிக மதிப்பு உள்ளதாக கூறி அவர்களை நம்ப வைத்துள்ளனர். இதை நம்பி பலர் லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்துள்ளனர்.

இதேபோல் இவர்கள் மேலும் பலரிடம் கோடிக்கணக்கில்  மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

.

மூலக்கதை