ரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு

தினமலர்  தினமலர்
ரூ.40 கோடியில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவு

சென்னை, -பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, 40 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நேற்று நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்தில், வட கிழக்கு பருவ மழையால், உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய, 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளை உள்ளடக்கிய, 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்ற, 9,909 முதல்நிலை மீட்பாளர்கள், தயார் நிலையில் உள்ளனர்.

மின் கம்பங்கள்



தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்க, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 4,768 பள்ளிகள், 105 கல்லுாரிகள், 2,394 திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தயார் நிலையில் உள்ளன. மின் வாரியம் சார்பில், ஒரு லட்சம் மின் கம்பங்கள், தயாராக வைக்கப் பட்டுள்ளன.மாநில மற்றும் மாவட்ட அவசர வழிகாட்டு மையம் சார்பில், 'TNSMART' என்ற, 'மொபைல் ஆப்' மற்றும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியே, பொது மக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் விளக்கினர்.

முதல்வர் கூறியதாவது:



மழைக் காலங்களில் விழும் மரங்களை அகற்ற, தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள், தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில், நீரை வெளியேற்ற, மின் மோட்டார்கள் தயாராக இருக்க வேண்டும். மீட்பு குழுக்கள், விரைவாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக, தேவையான உபகரணங்களுடன், தயாராக இருக்க வேண்டும்.

வட கிழக்கு பருவ மழை காரணமாக, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் இருக்க,போதுமான அளவில்,'பிளீச்சிங் பவுடர்' மற்றும் மருந்துகள்,இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள், இருப்பு வைக்கப்பட வேண்டும். சிறப்பு கருவிகள்பேரிடர் காலங்களில், பற்றாக் குறையை தவிர்க்க, இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும், அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் கடைகளில், போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில், கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டு உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அந்தந்த மாவட்டங்களில் எடுக்கப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து துறைகளை சேர்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில், கன மழை பெய்து வருகிறது. எனவே, மாநில பேரிடர் மீட்பு படையின ரால், பயிற்சி அளிக்கப்பட்ட, 50 வீரர்கள், கூடுதல் தீயணைப்பு வீரர்களை, அம்மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு செல்ல, தேசிய பேரிடர் மீட்பு படை, தயாராக இருக்க வேண்டும்பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, உடனடி தேவைகள், கூடுதல் உபகரணங்கள், சிறப்பு கருவிகள் போன்றவை வாங்க, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

மூலக்கதை