ஹரியானா தேர்தலில் அஜய் சவுதாலாவின் புதிய கட்சியான ஜேஜேபி ‘கிங் மேக்கர்’ ஆக முயற்சி

தினகரன்  தினகரன்
ஹரியானா தேர்தலில் அஜய் சவுதாலாவின் புதிய கட்சியான ஜேஜேபி ‘கிங் மேக்கர்’ ஆக முயற்சி

புதுடெல்லி: அக்டோபர் 21-ல் நடைபெறும் ஹரியானா தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே பெரும்பாலான தொகுதிகளில் நேரடிப் போட்டி நிகழ்கிறது. எனினும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் நிலவும் மும்முனைப் போட்டியால் அஜய் சவுதாலாவின் புதிய கட்சியான ஜேஜேபி ‘கிங் மேக்கர்’ ஆக முயல்கிறது. ஹரியானாவில் முதல் முறையாக தனிமெஜாரிட்டியுடன் ஆளும் கட்சி பாஜக உள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தன் ஆட்சியை தக்க வைக்க முயல்கிறது. இதற்கு சாதகமாக மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜகவிற்கு கிடைத்த வெற்றி அமைந்துள்ளது.இங்கு தனியாகவும், கூட்டணி அமைத்தும் பலமுறை ஆட்சி செய்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த முறை எவருடனும் கூட்டணி வைக்காத காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடிப் போட்டி ஹரியானாவின் 90 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் நிகழ்கிறது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) அதனுடன் இருந்து பிரிந்த ஓம் பிரகாஷின் மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவின் புதிய கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி), மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.இவர்களில் முன்னாள் எம்.பி.யுமான அஜய் சவுதாலாவின் ஜேஜேபிக்கு சுமார் 8 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் அந்த 8 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் ஜேஜேபியும் சேர்ந்து மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த எட்டு தொகுதிகளின் வெற்றியின் மூலம் தான் ஹரியானாவில் அமையும் ஆட்சியை முடிவு செய்யும் ‘கிங் மேக்கர்’ யார் என எதிர்பார்க்கிறது. பாஜகவுடன் காங்கிரஸுக்கு நிகழும் நேரடி மோதலால் தொங்குசபை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஜேஜேபியின் தலைவர் அஜய் சவுதாலாவின் மகன்களான துஷ்யந்த்சிங் சவுதாலா மற்றும் திக்விஜய் சவுதாலா ஆகியோர் கருதுகின்றனர். இவர்களில் துஷய்ந்த் கடந்த 2014 மக்களவைக்கு ஐஎன்எல்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.யாக இருந்தவராவார்.முன்னாள் துணை பிரதமரான தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியாணா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் தேர்வாணையத்தின் பல கோடி ஊழலில் சிக்கினார். இதில் தன் மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவுடன் சேர்ந்து ஒம் பிரகாஷ் சவுதாலாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஓம் பிரகாஷ் சவுதாலா குடும்பத்தில் எழுந்த மனக்கசப்பால் கடந்த டிசம்பர் 2018-ல் அஜய்சிங் தம் இருமகன்களை முன்னிறுத்தி ஜேஜேபி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். இதன் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு படுதோல்வி கிடைத்தது.இதனால் மீண்டும் தன் தந்தையின் ஐஎன்எல்டியுடன் ஜேஜேபியை இணைக்க விரும்பிய அஜய்சிங்கின் மகன்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிறகு திடீர் என அதை ஒத்திவைத்து சட்டப்பேரவைக்கும் தனித்தே போட்டியிடுகின்றனர். மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்த ஜேஜேபி பிறகு கடைசிநேரத்தில் அதைக் கைவிட்டு விட்டது. சமீபத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய அதன் முன்னாள் மாநிலத் தலைவரான அசோக் தன்வார் தம் ஆதரவை ஜேஜேபிக்கு அளித்துள்ளார். இவரைப்போல் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பாஜக தலைவர்களும் ஜேஜேபிக்கு தம் மறைமுக ஆதரவை அளித்து வருகின்றனர்.

மூலக்கதை