சாவர்கருக்கு பாரத ரத்னா விருது விமர்சனத்துக்கு மோடி பதிலடி

தினமலர்  தினமலர்
சாவர்கருக்கு பாரத ரத்னா விருது விமர்சனத்துக்கு மோடி பதிலடி

அகோலா, : 'மஹாராஷ்டிராவுக்கும், ஜம்மு - காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பும் அரசியல் சந்தர்ப்பவாதிகள், வெட்கி தலைகுனிய வேண்டும்' என, எதிர்கட்சியினர் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

தேசியவாதம்



இம்மாநிலத்திற்கு, வரும், 21ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள், பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.அகோலா மாவட்டத்தில், நேற்று நடந்த தேர்தல் பிரசார பொது கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:வீர் சாவர்கருக்கு, பாரத ரத்னா விருது வழங்க, பரிந்துரை செய்யப்படும் என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததை, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

தேச பக்தி என்பதை, காங்கிரஸ் கட்சியினர், பரிவார் பக்தி என பார்க்கின்றனர். தேசியவாதம் என்பதை, காங்கிரஸ் கட்சி, ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது என பார்க்கிறது. இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக, தேசியவாதம் எனும் மதிப்பீடுகளை, சமரசமின்றி பின்பற்றியவர், வீர் சாவர்க்கர். அவரை அவமானப்படுத்துவோர் தான், அம்பேத்கருக்கு பாரத் ரத்னா வழங்காமல், அன்று இழுத்தடித்தனர்.

கடைசி மூச்சு



மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கும், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்திற்கும் என்ன தொடர்பு என, எதிர்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். அரசியல் லாபத்திற்காக இப்படி பேச, அவர்களுக்கு வெட்கமாக இல்லையா?ஜம்மு - காஷ்மீரை சேர்ந்தவர்களும் இந்த தேசத்தின் குழந்தைகள் தான். மஹாராஷ்டிராவை சேர்ந்த எத்தனையோ வீரர்கள், ஜம்மு - காஷ்மீருக்காக உயிர் தியாகம் செய்து உள்ளனர்.

அவர்களை நினைத்து, இந்த நேரத்தில் பெருமைப்படுகிறேன். தங்கள் சொந்த நலனுக் காக ஊழலில் திளைக்கும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியினர், இந்த மாநிலத்தின் வளர்ச்சியை, பின்னுக்கு தள்ளி உள்ளனர்.காஷ்மீர் விவகாரத்தில், சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் அவர்கள், வெட்கி தலை குனிய வேண்டும். காங்கிரஸ் தன் கடைசி மூச்சில், காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

அடுத்து கோட்சேவுக்கா?



காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான ராஷித் அல்வி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:வீர் சாவர்க்கர், காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டார் என்பது வரலாறு. அவருக்கு, பாரத் ரத்னா வழங்குவோம் என, பா.ஜ., அரசு கூறுகிறது.இந்த பட்டியலில், அடுத்து நாதுராம் கோட்சேவின் பெயர் இருக்குமோ என நினைக்கையில், அச்சமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை