இரண்டு மாதங்களில் பா.ஜ.,வுக்கு புது தலைவர்

தினமலர்  தினமலர்
இரண்டு மாதங்களில் பா.ஜ.,வுக்கு புது தலைவர்

புதுடில்லி : ''வரும் டிசம்பருக்குள், உள்கட்சித் தேர்தல்கள் முடிந்து, புதியத் தலைவர் பதவியேற்பார்,''என, பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.

கடந்த, 2014ல், பா.ஜ.,வின் தலைவராக, அமித் ஷா பதவியேற்றார். இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வென்று பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சராக, அமித் ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.

பா.ஜ.,வின் சட்டவிதிகளின்படி, ஒருவருக்கு ஒரு பதவி என்பதால், கட்சித் தலைவராக வேறொருவர் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 'ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபைகளுக்கு தேர்தல் நடப்பதாலும், டிசம்பருக்குள் உள்கட்சித் தேர்தல்களை முடிக்க உள்ளதாலும், அதுவரை, அமித் ஷா கட்சித் தலைவராக தொடருவார்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமித் ஷா நேற்று கூறியதாவது: உள்கட்சித் தேர்தல், டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, புதிய தலைவர் பதவியேற்பார். புதிய தலைவர் நியமிக்கப்பட்டாலும், நான் பின்னணியில் இருந்து கட்சியை இயக்குவேன் என்று கூறுகிறார்கள். நான் தலைவராக பதவியேற்றபோதும் இதுபோல் கூறப்பட்டது.

இது காங்., கட்சியல்ல; பின்னணியில் இருந்து ஒருவர் இயக்க. எங்களுடைய கட்சியில் அனைத்தும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியின் அடுத்தத் தலைவராக, தற்போது செயல் தலைவராக உள்ள, ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை