துர்கா பூஜையில் எனக்கு அவமானம்; மம்தா அரசு மீது கவர்னர்

தினமலர்  தினமலர்
துர்கா பூஜையில் எனக்கு அவமானம்; மம்தா அரசு மீது கவர்னர்

கோல்கட்டா : ''கோல்கட்டாவில் நடந்த துர்கா பூஜை விழாவில், என்னை அவமானப்படுத்தினார்கள். இருப்பினும், மக்கள் சேவையில் இருப்பதால், என்னுடைய அரசியலமைப்புக் கடமைகளை, நான் செய்யாமல் இல்லை,'' என, முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மீது, மேற்கு வங்க கவர்னர், ஜெக்தீப் தன்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், கடந்த வெள்ளியன்று, துர்கா பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில், மாநில கவர்னர் ஜெக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கவர்னர் தன்கருக்கு, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்காமல், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையின் ஓரத்தில், இருக்கை வழங்கப்பட்டது.


இது பற்றி, கவர்னர் தன்கரிடம், நிருபர்கள் நேற்று கேட்டனர். இதற்கு, கவர்னர் கூறியதாவது: துர்கா பூஜைக்கு என்னை அழைத்து, அவமானப்படுத்தி விட்டனர். மக்கள் சேவையில் இருப்பதால், நான் எந்த விஷயத்துக்கும் அதிருப்தி தெரிவிக்காமல், என்னுடைய அரசியலமைப்புக் கடமையை செய்து திரும்பினேன். அந்த அவமானம் எனக்குரியது அல்ல, மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமானது. அந்த அவமானத்தில் இருந்தும், வேதனையில் இருந்தும், நான் வெளியே வர, எனக்கு, மூன்று நாட்கள் ஆனது. இவ்வாறு கவர்னர் தன்கர் குற்றம்சாட்டினார்.

மூலக்கதை