போக்குவரத்து ஊழியர்கள் 11வது நாளாக போராட்டம்,..முன்னாள் ராணுவ வீரர்கள் போலீசார் மூலம் பஸ்கள் இயக்கம்: தெலங்கானா முதல்வர் உத்தரவு

தினகரன்  தினகரன்
போக்குவரத்து ஊழியர்கள் 11வது நாளாக போராட்டம்,..முன்னாள் ராணுவ வீரர்கள் போலீசார் மூலம் பஸ்கள் இயக்கம்: தெலங்கானா முதல்வர் உத்தரவு

திருமலை: தெலங்கானாவில் அரசு போக்குவரத்து பஸ் ஊழியர்கள் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முன்னாள் ராணுவ வீரர்கள், போலீசாரை வைத்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ்  உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பஸ்கள் வாங்க வேண்டும் என்பது உட்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, 1,200 ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில்  சீனிவாஸ் என்ற டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் 11வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்டத்தை முறியடிக்கும் வகையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள், காவல்துறையினர்,  முன்னாள் ராணுவ வீரர்கள், அனுபவம் வாய்ந்த கனரக வாகன ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்து அரசு பஸ்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்த முதல்வர் சந்திரசேகர ராவ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு உள்ள நிலையில்  போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 19ம்தேதி மாநிலம் முழுவதும் பந்த் நடத்துவதற்கு அனைத்து கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையே விஜயவாடாவில் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நிருபர்களிடம்  கூறுகையில், ‘‘அரசு உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு நடத்த வேண்டும். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் 19ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் இதற்கு  ஜன சேனா கட்சி   முழு ஆதரவு  அளிக்கும்’’ என்றார்.

மூலக்கதை