பயங்கரவாதத்தை ஒடுக்க பாக்.,குக்கு நெருக்கடி

தினமலர்  தினமலர்
பயங்கரவாதத்தை ஒடுக்க பாக்.,குக்கு நெருக்கடி

புதுடில்லி: பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு, எப்.ஏ.டி.எப்., எனப்படும், பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி தருவதை கண்காணிக்கும் அமைப்பு, பாக்.,குக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்கும் மற்றும் கண்காணிக்கும் அமைப்பு, நம் அண்டை நாடான, பாக்., பயங்கரவாதத்தை தடுக்க தவறியதால், அதை, 'கிரே' நிறம் எனப்படும் மிகவும் மோசமான செயல்பாடு பட்டியலில் சேர்த்துள்ளது.

கடந்தாண்டு, ஜூனில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு, பாக்.,குக்கு, 40 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றாவிட்டால், பாக்., கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்; அவ்வாறு சேர்க்கப்பட்டால், பல்வேறு சர்வதேச அமைப்புகள், நாடுகளிடம் இருந்து எந்த நிதி உதவியும் கிடைக்காது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில், 40 நிபந்தனைகளில், ஒன்றை மட்டுமே பாக்., நிறைவேற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், எப்.ஏ.டி.எப்., கூட்டம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாக்.,கின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த, பயங்கரவாத தடுப்புப் படைகளின் தலைவர்கள் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கை எடுக்க, பாக்.,குக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியா, பாக்., இடையே போர் ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை. போர் ஏற்பட்டால், பண இழப்பைவிட, அதிக அளவு உயிர் இழப்பு ஏற்படும். மேலும், வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதும் நிச்சயமில்லாதது.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், எப்.ஏ.டி.எப்., கூட்டத்தில் தங்களுடைய நிலைப்பாடு குறித்து விவரிக்க, பாக்., குழு, பாரிஸ் சென்றுள்ளது.


மூலக்கதை