அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதம் முடிந்தது: 144 தடை உத்தரவு அமல்

தினகரன்  தினகரன்
அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதம் முடிந்தது: 144 தடை உத்தரவு அமல்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலான இறுதிக்கட்ட வாதம் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுடன் முடிந்தது. விரைவில் இறுதி வாதங்கள் முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதால்,  அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் அயோத்தி வழக்கின் வாதங்களை வரும் 17ம் தேதியுடன் முடித்து கொள்ள இந்து, முஸ்லிம் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில்,  ஏறக்குறைய 10 நாள் தசரா விடுமுறைக்கு பின்னர், அயோத்தி வழக்கின் 38வது நாள் விசாரணை நேற்று நடந்தது. அப்போது முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜிவ் தவான், அந்த நிலத்தின் மீது இந்துகளுக்கு விதிகளுக்கு உட்பட்ட  உரிமை மட்டுமே உள்ளது. அவர்கள் உள்ளே நுழையவும் பூஜைகள் செய்யவும் மட்டுமே உரிமை உள்ளது. அந்த இடம் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது\' என வாதிட்டார்.இதனைக் கேட்ட சன்னி வக்பு வாரிய தரப்பில் ஆஜரான வக்கீல், 1989 வரை அந்த இடத்துக்கு இந்துகள் உரிமை கோரவில்லை. எனவே கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் எப்படி இருந்ததோ, அதேபோன்று மசூதி கட்டப்பட  வேண்டும். 1886ல் இந்துகள் உரிமை கோரியதாக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. முஸ்லிம்கள் ஒருபோதும் அவர்களது உரிமையை விட்டுக் கொடுக்கவில்லை\' என்று கூறினார். இதனிடையே விசாரணையில் குறுக்கிட்ட நீதிபதி சந்திராசூட்,  `சர்ச்சைக்குரிய நிலத்தின் வெளிப்பகுதி இந்துகளிடம்தான் இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. தற்போது இரும்பு தடுப்பு அமைப்பது இந்துகள், முஸ்லிம்கள் தனித்தனியாக வழிபாடு நடத்துவதற்காகவே\' என்று அறிவுறுத்தினார். இதற்கு, `நீதிபதி அவர்கள் மற்றொரு தரப்பினரிடம் கேள்விகள் எதுவுமே கேட்பதில்லை. அனைத்து கேள்விகளுமே முஸ்லிம்கள் தரப்பினரை நோக்கியே கேட்கப்படுகிறது. நாங்களும் அதற்கு பதில் அளித்து கொண்டிருக்கிறோம்\' என்று சன்னி  வக்பு வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ராம் லாலா தரப்பு வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன், இது தற்போது தேவையற்ற பேச்சு\' என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இத்துடன் முஸ்லிம் தரப்பு இறுதி வாதம் உச்சநீதிமன்றத்தில் நேற்றுடன்  முடிவடைந்துள்ளது. நவம்பர் 17ம் தேதியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் இவ்வழக்கில் தீர்ப்பளிக்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது. தடை உத்தரவு அமல்: மாவட்ட ஆட்சியர் அனூஜ் குமார் ஜா கூறுகையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி டிசம்பர் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர வரவிருக்கும் தீபாவளி  பண்டிகை, அயோத்திக்கு வருகை தருபவர்களை கருத்தில் கொண்டு  இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்ட விரோத நடவடிக்கை, சட்ட விரோதமாக கூட்டம் கூடுவது ஆகியவற்றுக்கு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி முதல் தடை  விதிக்கப்பட்டிருந்தாலும், அதில் விடுபட்ட இரண்டு முக்கிய குறிப்புகள் தற்போதைய தடை உத்தரவில் சேர்க்கப்பட்டுள்ளன\'\' என்றார்.

மூலக்கதை