நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ. 2,000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை திடீரென வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.

கறுப்பு பணம் ஒழிப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது போன்ற காரணங்களுக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், பணப் புழக்கத்துக்கு பதிலாக ஆன்லைன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

திடீரென புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் வாபஸ் பெற்றதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

தொடர்ந்து அடுத்த சில தினங்களில் புதிதாக ரூ. 2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.

தற்போது ரூ. 2,000 நோட்டு புழக்கத்தில் இருந்தாலும் கூட, ஏடிஎம் மையங்களில் சில நேரங்களில் ரூ. 2,000 நோட்டு கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இதனிடையே, ரூ. 2,000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், இந்தத் தகவல்களை மத்திய அரசு மறுத்துவருகிறது.

இதுகுறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ ) ரிசர்வ் வங்கியிடம் சில தகவல்கள் கோரி விண்ணப்பித்தது.

அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி, ‘ரூ. 2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது’ என தெரிவித்துள்ளது. மேலும் அந்த பதிலில், ‘ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, கடந்த 2016-17ம் நிதியாண்டில் 354. 2991 கோடி எண்ணிக்கையிலான ரூ. 2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டன.

தொடர்ந்து, 2017-18ம் நிதியாண்டில் 11. 1507 கோடி நோட்டுகளும், 2018-19ம் நிதியாண்டில் 4. 669 கோடி நோட்டுகளும் அச்சிடப்பட்டன. ஆனால், 2019-20ம் நிதியாண்டில் (கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல்) ஒரு நோட்டுகள் கூட அச்சிடப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

இது, ரூ. 2,000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதாக நீண்ட நாட்களாக வலம் வந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை திடீரென வாபஸ் பெறாமல், படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் பிரச்னை ஏற்படாது என்கின்றனர்.

ரூ. 2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதால், புதிய ரூ. 500 நோட்டுகள் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை